மாற்றுத் திறனாளி பெண் - கூட்டு பாலியல் பலாத்காரம்

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் பகுதியை சேர்ந்த வாய் பேச முடியாத காது கேளாத 35 வயதுடைய மாற்றுத் திறனாளி பெண். இவர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் ஆலங்குடி பகுதியில் உள்ள மர்தான் ரைஸ் மில்லில் பணிபுரிகிறார்.

தினமும் காலை பணிக்கு சென்று மீண்டும் மாலை பேருந்தில் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். வழக்கம் போல அந்த பெண் கடந்த 17 - ம் தேதி மாலை மார்டன் ரைஸ் மில்லில் பணி முடிந்து விட்டு, வீட்டிற்கு செல்வதற்காக ராசியமங்கலம் பஸ் ஸ்டாப்பில் பேருந்திற்காக காத்திருந்திருக்கிறார்.

அப்போது அங்கு காரில் வந்த இருவர் இவரை வலுக் கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து நள்ளிரவு நேரத்தில் சாலையிலேயே விட்டு சென்றுள்ளனர்.

5 பிரிவுகளில் வழக்கு பதிவு

பின்னர் அந்தப் பெண் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் தகவல் அறிந்து , சம்பவ இடத்திற்கு வந்த மழையூர் போலீசார் அப்பெண்ணை மீட்டு, புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து , ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தப்பி சென்ற குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மணக்கொல்லை கிராமத்தை சேர்ந்த டிரைவரான 55 வயதுடைய மாரிமுத்து மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த டிரைவர் 55 வயதுடைய சேகர், ஆகிய இருவரையும் ஆலங்குடி மகளிர் போலீசார் காவல் நிலையால் அழைத்து விசாரித்த நிலையில் குற்றம் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் மாரிமுத்து மற்றும் சேகர் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின் பேரில் போலீசார் மாரிமுத்து மற்றும் சேகர் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source: Read Full Article