காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் திருமணப்பேறு, புதிய வீடு, பதவி உயர்வு கிடைப்பதாக ஐதீகம். "வரம்தரும் வல்லக்கோட்டை, வந்தாரை வாழ வைக்கும் வல்லக்கோட்டை" என்று இத்தலம் ஆன்மீகப் பெரியோர்களால் சிறப்பிக்கப்படுகிறது. இத்தலத்திற்கு பகீரத மன்னன், இந்திரன், துர்வாசர், பிருகஸ்பதி, அருணகிரிநாதர் ஆகியோர் வந்து வழிபட்டுள்ளனர் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.

ஓராண்டு நிறைவு: நட்சத்திர முறைப்படி வருஷாபிஷேகம்

பழம்பெருமை வாய்ந்த இத்திருக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு (2025) ஆனி மாதம் 23-ஆம் தேதி அனுஷ நட்சத்திர நாளில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த ஆண்டு ஆனி மாத அனுஷ நட்சத்திரம் சனிக்கிழமையன்று வந்ததை முன்னிட்டு, நட்சத்திர முறைப்படி ஓராண்டு நிறைவு பெற்று வருஷாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நவகலச யாக பூஜையும் பிரம்மாண்ட மலர் மாலையும்

வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மாலையில் மயில் மண்டபத்தில் நவகலசங்களில் புனிதநீர் நிரப்பப்பட்டு முதற்கால யாகபூஜை நடைபெற்றது. தொடர்ந்து சனிக்கிழமை காலையில் இரண்டாம் கால யாகபூஜை நிறைவடைந்து, மங்கல வாத்தியங்கள் முழங்கிட புனித நீர் கலசங்கள் மூலவர் கருவறைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

காலை 11 மணிக்கு மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு நவகலசாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. அப்போது கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் "அரோகரா" கோஷங்களை எழுப்பி முருகனை வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 18 அடி உயரத்தில் பிரம்மாண்டமான மரக்காய் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டன.

ரத்தினாங்கி சேவையில் திருக்கல்யாண உற்சவம்

உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்குக் காலையில் பால் அபிஷேகம் செய்யப்பட்டு, ரோஜா, வெற்றிலை, சம்பங்கி, சாமந்தி மாலைகள் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அன்று மாலையில் சுவாமிக்குத் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, ரத்தினாங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மாங்கல்யதாரணம் நடைபெற்றது. இதன் பின், வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி உள்பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரசாத விநியோகமும் நிர்வாக ஏற்பாடுகளும்

வருஷாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு, திருக்கோயிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் மற்றும் சுண்டல் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் சி.குமரதுரை அறிவுரைப்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் அறங்காவலர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர். இத்திருக்கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆனி 23-ஆம் நாள், எதிர்வரும் ஜூலை 7-ஆம் தேதி வருவதால், அன்றைய தினத்திலும் தமிழ் மாத தேதி முறைப்படி திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article