ஆவின் பால் விநியோகம் பாதிப்பு

பால் மனித உடலுக்கு மிக முக்கியமான இயற்கை உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை அதிகரித்து வழங்குவது பாலாகும். அந்த வகையில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் தமிழக அரசு சார்பாக ஆவின் மூலம் பால் உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆவின் நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், பால் பாக்கெட்டுகள் உற்பத்தியை குறைத்து சென்னை பெருநகரில் சுமார் 30% வரை விநியோகத்தையும் குறைத்துள்ளதாக பால் முகவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ஆவின் நிறுவனம் மறுத்துள்ளது.

பால் விநியோகம் 30 % குறைப்பா.?

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ பகுதியில் ஆவின் நிறுவனம் பால் விநியோகத்தை கணிசமாகக் குறைத்துள்ளதாக ஊடகங்களின் வெளியாகி வரும் செய்தி தவறானவை மற்றும் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை என தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனம், சென்னை மெட்ரோ முழுவதும் அனைத்து வகையான பால்களையும் தடையின்றி தொடர்ந்து விநியோகித்து வருவதாக தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனம், சென்னை மெட்ரோ பகுதியில் உள்ள நுகர்வோருக்கு சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 14.50 லட்சம் லிட்டர் பாலை வழங்குகிறது.

தடையின்றி பால் விநியோகம்

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், பால் விநியோகம் 36,000 லிட்டர் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எந்தவொரு பால் வகையின் விநியோகத்திலும் குறைப்பு எதுவும் செய்யப்படவில்லை. வழக்கமான செயல்பாட்டுத் தேவைகள் மற்றும் நிலவும் நுகர்வோர் தேவைக்கு ஏற்ப பால் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் நுகர்வோருக்கு பால் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது. பொதுமக்களும் நுகர்வோரும் இதுபோன்ற தவறான செய்திகளால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும், ஆவின் பால் விநியோகம் வழக்கம் போல் தொடரும் என்றும் உறுதியளிக்கப்பதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

Source: Read Full Article