துரோகத்தைப் பார்த்துவிட்டோம், இனி விசுவாசத்தைப் பார்ப்போம் - கடலூர் மாநாட்டில் தேமுதிகவின் புதிய ரத்தம் விஜய பிரபாகரன் ஆவேசப் பேச்சு!
தேமுதிகவின் பிரம்மாண்ட மாநில மாநாட்டில் இன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரனின் கன்னிப் பேச்சு. “பத்து வயதில் மதுரையில் கேப்டனின் கையைப் பிடித்துக்கொண்டு மாநாட்டில் கலந்து கொண்டேன். இன்று உங்கள் முன் தேமுதிக மாநாட்டில் முதல் முறையாக உரையாற்றுகிறேன்” எனத் தனது உரையைத் தொடங்கிய அவர், தனது தந்தை விஜயகாந்தின் நேர்மையான அரசியலை மேடையில் உரக்கப் பேசினார். லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பேன் என நெஞ்சுறுதியோடு முழங்கிய ஒரே தலைவர் கேப்டன் தான் என்றும், அவரது கொள்கைகளே கட்சியின் கோட்பாடு என்றும் அவர் உணர்ச்சிபொங்கத் தெரிவித்தார்.
தேமுதிகவின் வாக்கு வங்கிக் குறித்து ஏளனமாகப் பேசுபவர்களுக்குப் பதிலடி கொடுத்த விஜய பிரபாகரன், “கடவுளின் குழந்தைகள் போல் சிலர் எங்கள் வாக்கு சதவீதத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் ஒருமுறை களத்திற்கு வந்து பார்த்தால் உண்மை புரியும். தேமுதிக தேர்தலுக்காகப் பேரம் பேசுவதாகக் கூறுபவர்களுக்கு நான் ‘ஓப்பன் சேலஞ்ச்’ விடுகிறேன். 2005-ஆம் ஆண்டில் விஜயகாந்திற்கு எவ்வளவு சொத்து இருந்தது, இன்று எவ்வளவு இருக்கிறது என்று பாருங்கள். மக்களுக்காகவும் கட்சிக்காகவும் எங்களிடம் இருந்த சொத்துக்களைத்தான் இழந்துள்ளோம், ஆனால் அது குறித்து நாங்கள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. இதற்கெல்லாம் பயந்தால் அரசியல் செய்ய முடியாது; இது எதிர்நீச்சல் போட்டு வளர்ந்த கட்சி” என ஆவேசமாக முழங்கினார்.
கூட்டணி குறித்துப் பேசிய அவர், “கூட்டணி முடிவை அறிய உங்களைப்போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நாங்கள் துரோகத்தைப் பார்த்துவிட்டோம், இனி விசுவாசத்தைப் பார்ப்போம். இரண்டு பெரிய கட்சிகளுக்கும் தேமுதிகவின் தேவையும் சேவையும் கண்டிப்பாக இருக்கிறது. தேமுதிக எங்குச் சேர்கிறதோ அதுதான் மெகா கூட்டணி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். குறிப்பாக, நடிகர் விஜய்க்குத் தனது உரையில் ஒரு முக்கியமான ஆலோசனையை வழங்கினார். “விஜய் அண்ணனுக்கு ஒரு சின்ன அட்வைஸ்; ஜன நாயகன் பட விவகாரத்தில் காங்கிரஸ் உங்களுக்கு ஆதரவு கொடுப்பதை நம்பிவிட வேண்டாம். அவர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள்; விருதுநகரில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்” என அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
