கரும்பு கொள்முதலில் குறை கூறுபவர்கள் வியாபாரிகளே - பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் அதிரடி விளக்கம்!
தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து மட்டுமே கரும்புகளைக் கொள்முதல் செய்வதாகவும், அவர்களுக்கு உரிய முழுத் தொகையும் வழங்கப்படுவதாகவும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த "உங்க கனவை சொல்லுங்க" என்ற முன்னோடித் திட்டத்தின் தொடர்ச்சியாக, திண்டுக்கல் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் இ. பெரியசாமி பங்கேற்றார். அங்கு 1,500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்குத் திட்டத்திற்கான கைபேசி இணைப்புகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரும்பு கொள்முதல் மற்றும் அரசியல் கூட்டணி குறித்துப் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
"மாண்புமிகு முதலமைச்சரின் இந்தத் திட்டம் இந்தியாவிலேயே மிகச்சிறந்த ஒன்றாகும். மக்கள் கேட்காமலே அவர்களின் இல்லங்களுக்குச் சென்று, கஷ்டங்களைக் கேட்டறிந்து 2030-க்குள் தீர்வு காண வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. 1,500 தன்னார்வலர்கள் மூலம் 7 லட்சம் குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் கனவுகளைப் பதிவு செய்ய உள்ளோம்" என அமைச்சர் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் சொன்னதையும், சொல்லாததையும் முதல்வர் செய்துள்ளதாக அவர் புகழாரம் சூட்டினார்.
விவசாயிகளிடம் குறைந்த விலைக்குக் கரும்பு கொள்முதல் செய்யப்படுவதாக எழுந்த புகார்களுக்குப் பதிலளித்த அவர், "நாங்கள் தமிழக விவசாயிகளிடமிருந்து மட்டுமே கரும்புகளை வாங்குகிறோம்; வெளிமாநிலக் கரும்புகளைத் தவிர்த்துள்ளோம். விவசாயிகளுக்கு முழுத் தொகையும் முறையாகச் சென்றடைகிறது. இதில் வியாபாரிகள் தங்களது லாபத்திற்காகக் குறை சொல்லலாம், ஆனால் அதிகாரிகள் அதற்குத் துணை போக மாட்டார்கள். வியாபாரிகள் தங்களது ஆதிக்கத்தை இங்கே செலுத்த முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் - திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, "அன்புமணி தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளார். அவர் திமுகவோடு இணைய நினைக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. அரசியல் கணக்குகளின்படி யார் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் எமது தலைமையுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா என்பது குறித்து எனக்குத் தகவல் இல்லை" எனக் கூறி முடித்தார்.
