நில மோசடி புகாரைத் தீர்க்க 10% கமிஷன் பேரம்: இடைத்தரகர் மூலமாகப் பணம் பெற்ற ஏ.சி மீது ஊழல் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
கோவை: கோயம்புத்தூர் நில மோசடி புகாரைத் தீர்த்து வைக்க லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் புகாரில், கோவை நகர குற்றப்பிரிவு முன்னாள் உதவி ஆணையர் மற்றும் அவரது இடைத்தரகர் மீது கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் (VAC) வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய அதிகாரியின் மீதான இந்த நடவடிக்கை, போலிஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கின் பின்னணி:
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நாகராஜன் மற்றும் நூருல்லா ஆகியோர், வெள்ளலூர் கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை ரூ.6.25 கோடிக்கு வாங்க மருதாசலம் என்பவரிடம் ஒப்பந்தம் செய்து ரூ.2.42 கோடி முன்பணம் கொடுத்துள்ளனர். பின்னர் அந்த நிலத்தில் சிவில் வழக்கு இருப்பது தெரியவந்ததையடுத்து, பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் நில உரிமையாளர்கள் பணத்தைத் தராமல் ஏமாற்றியதுடன், அதே நிலத்தை மூன்றாம் நபர்களுக்கும் விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.
உதவி ஆணையரின் கமிஷன் பேரம்:
பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து கடந்த 2023-ம் ஆண்டு கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இந்தப் புகார் அப்போதைய குற்றப்பிரிவு உதவி ஆணையர் குணசேகரன் (A-1) என்பவரிடம் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, நில உரிமையாளர்கள் ரூ.2.10 கோடியைத் திருப்பித் தர ஒப்புக் கொண்டனர். இந்தச் சமரசத்தின் போது, உதவி ஆணையர் குணசேகரன் மனுதாரர்களிடம் 10% லஞ்சம் கேட்டுள்ளார். இதற்காக பிரவீன் (A-2) என்பவரை இடைத்தரகராக நியமித்து, வழக்கறிஞர்களைத் தள்ளி வைத்துவிட்டு நேரடியாகப் பேசுமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.
விஜிலன்ஸ் வழக்கு பதிவு:
குற்றச்சாட்டுகளின்படி, 2023 ஆகஸ்ட் மாதம் முதற்கட்டமாக ரூ.50 லட்சம் மீட்கப்பட்ட போது, உதவி ஆணையர் குணசேகரன் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இறுதியில் ஆகஸ்ட் 31-ம் தேதி ரூ.4.40 லட்சம் லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் இடைத்தரகர் பிரவீன் தனது மனைவியின் வங்கி கணக்கிற்கு UPI மூலம் ரூ.10,000 பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பூர்வாங்க விசாரணையின் அடிப்படையில்:
- குணசேகரன் (A-1): ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7(b).
- பிரவீன் (A-2): பிரிவு 12 r/w 7(b). ஆகிய பிரிவுகளின் கீழ் Cr.No.24/2025/AC/CB என லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கான முதல் தகவல் அறிக்கை (FIR) கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு உயர் அதிகாரி ஒருவர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்திருப்பது கோவையில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.


