திருப்பரங்குன்றம் தீர்ப்பு குறித்து அவதூறு பேச்சு; நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்த அமைச்சர் ரகுபதிக்கு எதிராக, பாஜக வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலையில் தீபம் ஏற்ற அனுமதி அளித்துத் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை, இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சராக இருந்து தற்போது கனிமவள அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ரகுபதி, நீதிமன்றத் தீர்ப்பையும் நீதிபதிகளையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்துப் பேட்டியளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிமன்றத்தின் மாண்பைச் சிதைக்கும் வகையில் பேசிய அமைச்சருக்கு எதிராக பாஜக வழக்கறிஞர்கள் தற்போது சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
பாஜக வழக்கறிஞர்கள் ஜி.எஸ். மணி மற்றும் ஏற்காடு ஏ. மோகன்தாஸ் ஆகியோர் அமைச்சர் ரகுபதிக்கு அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில், “அமைச்சர் பதவியின் கண்ணியத்திற்கு எதிராகவும், நீதித்துறையின் மரியாதையைக் குறைக்கும் வகையிலும் நீங்கள் கருத்துகளைப் பரப்பி வருகிறீர்கள்” எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டதோடு, சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் திமுக தரப்பினர் செயல்பட்டு வந்ததாக அந்த நோட்டீஸில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அந்த நோட்டீஸில், “உயர்ந்த பொறுப்பில் இருக்கும் நீங்கள், நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் பேசியதற்காக ஏன் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரக் கூடாது?” எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. உடனடியாகத் தனது கருத்துகளைத் திரும்பப் பெற்று, அமைச்சர் ரகுபதி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும், தவறினால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என்றும் வழக்கறிஞர்கள் எச்சரித்துள்ளனர். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் ஏற்கனவே அரசியல் களம் சூடாகியுள்ள நிலையில், அமைச்சருக்கு எதிராக அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸ் திமுக மற்றும் பாஜக இடையே பெரும் மோதலை உருவாக்கியுள்ளது.
