நிதானமாக முடிவெடுப்போம்; இனி நாம் சாணக்கியனாகச் செயல்படுவோம்! - கடலூர் மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி முழக்கம்!
தேமுதிகவின் அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய கடலூர் மண்ணில், இன்று நடைபெற்ற அக்கட்சியின் பிரம்மாண்ட மாநாட்டில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களிடையே எழுச்சி உரை ஆற்றினார். “கேப்டன் விஜயகாந்திற்கு முதல் வெற்றியைக் கொடுத்த ராசியான மாவட்டம் கடலூர். அவர் இல்லாமல் இந்த மாநாடு நடக்கக் கூடாது என்பதற்காகவே மேடையில் அவருக்குச் சிம்மாசனம் இட்டுள்ளோம். இன்று உங்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் நான் கேப்டனையே பார்க்கிறேன்” எனத் தனது உரையை உணர்ச்சிப்பூர்வமாகத் தொடங்கினார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ‘கேப்டன்’ என்கிற ஒற்றைச் சொல்லுக்காகச் சொந்தப் பணத்தைச் செலவு செய்து கூடியுள்ள இந்தத் தொண்டர் கூட்டமே தேமுதிகவின் பலம் என அவர் பெருமிதம் கொண்டார்.
கூட்டணி குறித்துப் பேசுகையில் மிகவும் சாதுர்யமாகவும், எச்சரிக்கையுடனும் கருத்துகளைப் பகிர்ந்த பிரேமலதா, “மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அவர்கள் கூட்டணி குறித்த தங்கள் விருப்பத்தை என்னிடம் தெரிவித்துவிட்டார்கள். தேமுதிக இல்லாமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என்பதே எதார்த்தம். எங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட்டு, பின்னர் வாய்ப்புத் தர மறுப்பவர்களுக்கு (அதிமுகவை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி) காலமே பதில் சொல்லும். மற்ற மாநாடுகளோடு தேமுதிக மாநாட்டை ஒப்பிட முடியாது. ஒரு சிறந்த தலைவன் அடுத்த தேர்தலை நோக்கி மட்டும் இருக்க மாட்டான், அடுத்த தலைமுறையை நோக்கி இருப்பான்; அப்படி வாழ்ந்தவர் தான் நம் கேப்டன்” என முழக்கமிட்டார்.
கூட்டணி முடிவை ஏன் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறித்து விளக்கிய அவர், “மாவட்டச் செயலாளர்கள் கருத்தின் அடிப்படையில் நாங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டோம். ஆனால், இன்றைய அரசியல் சூழலில் அதனை இப்போது அறிவிக்க வேண்டுமா என்பதைத் தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்று வரை எந்தக் கட்சியும் அதிகாரப்பூர்வமாகத் தங்கள் கூட்டணியை அறிவிக்கவில்லை. இவ்வளவு நாள் நாம் ‘சத்திரியனாக’ நேருக்கு நேர் நின்று போர் புரிந்தோம்; இனி ‘சாணக்கியனாக’ நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுவோம். நமக்கென்று ஒரு மரியாதையும், கௌரவமும் உள்ளது. அதனை மதிப்பவர்களுடன் மட்டுமே கூட்டணி வைப்போம். நாம் யாருடன் கைகோர்க்கிறோமோ அவர்களே வெற்றி பெறுவார்கள். தை பிறந்தால் நிச்சயம் நல்ல வழி பிறக்கும்; வெற்றி ஒன்றுதான் நமது இலக்கு” எனத் தனது உரையை ‘சரவெடி’யாக நிறைவு செய்தார்.
