தவெக தரப்பில் இருந்து என்னிடம் பேசினார்கள்! - மதுரையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் ‘கூட்டணி’ குறித்துப் பரபரப்புப் பேட்டி!
தமிழக அரசியல் களம் தேர்தல் கூட்டணிகளுக்காகக் களம் கண்டுள்ள வேளையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்தப் பேட்டியில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரண்டுமே தற்போது வலுவிழந்து காணப்படுவதாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை அவர்களுக்கு இணையான ஒரு சக்தியாகவே தாம் கருதுவதாகவும் அவர் 'ஓப்பனாக'த் தெரிவித்தார்.
திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய கிருஷ்ணசாமி, “திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது; நிறைவேற்றப்பட்ட சில திட்டங்களும் கடைக்கோடி மக்களைச் சென்றடையவில்லை. கிராமப்புறங்களை நோக்கித் தொழிற்சாலைகள் வராதது பெரும் ஏமாற்றம். மொத்தத்தில் திமுக அரசு அனைத்து மட்டங்களிலும் தோல்வியுற்றுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும், திமுகவுக்கு மாற்றாக அதிமுக மட்டுமே இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றும், ஊழலற்ற ஆட்சியைத் தருபவர்களே தற்போதைய தேவை என்றும் அவர் 'பஞ்ச்' வைத்தார்.
மிக முக்கியமாக, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசிய அவர், “ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என விஜய் மட்டுமே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அவரது கட்சி எப்படி வலுப்பெறும், அவரை நோக்கி யார் யாரெல்லாம் செல்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தவெக-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்கள் என்பது உண்மைதான். ஆனால், ஜனவரி 7-ஆம் தேதி வரை யாரிடமும் கூட்டணி குறித்துப் பேசப்போவதில்லை என நாங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்; இனிமேல்தான் எங்களது அடுத்தகட்ட நகர்வு இருக்கும்” எனப் புதிய கூட்டணியற்கான 'க்ளூ' கொடுத்தார்.
அதிமுக உடனான உறவு குறித்துக் கேட்டபோது, “நாங்கள் அதிமுகவிடம் இருந்து பிரிந்து செல்லவில்லை, பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும், எங்களை யார் வெற்றி பெற வைப்பார்களோ, அவர்களுடன் கூட்டணி சேர்வதே எங்களது வியூகம் (Strategy)” எனத் தெளிவுபடுத்தினார். காசு பணம் இல்லாத தேர்தலே உண்மையான ஜனநாயகம் என்று குறிப்பிட்ட அவர், ஓட்டுக்குத் தந்து வெற்றி பெறுவதை விடுத்து, மக்கள் செல்வாக்கோடு ஜெயிக்க யாராவது முன்வர வேண்டும் எனச் சவால் விடுத்தார். 2010-ஆம் ஆண்டு உள் ஒதுக்கீடு விவகாரத்தில் துரோகம் இழைத்தவர்கள் யார் என்பதையும் மக்கள் மறக்க மாட்டார்கள் என அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
