எங்களை ஏளனம் செய்தவர்கள் இப்போது தங்களுக்குள் மோதிக்கொள்கின்றனர் - பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளாசல்!
திருவாரூரில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசியல் சூழல் மற்றும் திமுக கூட்டணி குறித்தும் செய்தியாளர்களிடம் பல்வேறு அதிரடிக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
திமுக - காங்கிரஸ் மோதல்:
திமுக கூட்டணியில் தற்போது நிலவி வரும் சலசலப்புகள் குறித்துப் பேசிய அவர், “திமுக கூட்டணிக்குள்ளே பெரும் குழப்பங்கள் இருக்கின்றன. குறிப்பாகக் காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே நிலவும் குழப்பத்தின் காரணமாகவே அவர்கள் ஒருவரையொருவர் விமர்சித்துப் பேசி வருகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்னால் எங்களைக் கேலியும் கிண்டலும் செய்தவர்கள், இன்று தங்களுக்குள்ளேயே குழம்பிப் போயிருக்கிறார்கள்” எனச் சாடினார்.
தேர்தல் அறிக்கை - ஒரு ஏமாற்று வேலை:
திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்துக் கடுமையாக விமரிசித்த நயினார் நாகேந்திரன், “கொடுக்க முடியாதவன் எதையோ காட்டுவது போல, இது ஒரு ஏமாற்று வேலை” என்று குறிப்பிட்டார். மேலும், “வருகிற ஜூன் மாதம் திமுக ஆட்சியில் இருக்காது; ஆட்சியில் இல்லாத போது ஒரு திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று கூறினால் அதையும் நம்பிச் சிலர் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். தேர்தல் அறிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
கூட்டணி மற்றும் தவெக:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தற்போதைய நிலை குறித்து அவர் கூறியதாவது, தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை அனைத்துக் கூட்டணி பேச்சுவார்த்தைகளையும் எடப்பாடி பழனிசாமி அவர்களே முன்னின்று மேற்கொண்டு வருகிறார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயமாகத் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்.
தவெக-விற்கு எச்சரிக்கை:
“தேவையில்லாமல் பாரதிய ஜனதா கட்சியைப் பற்றித் தமிழக வெற்றிக் கழகத்தினர் (TVK) பேசுவது அர்த்தமற்றது மற்றும் நியாயமற்றது; இதுபோல பேசுவதைத் தவிர்க்க வேண்டும்” எனத் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இன்னும் எந்தெந்தக் கட்சிகள் வர வாய்ப்புள்ளதோ, அந்த அணிகள் அனைத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. பாஜக யாரையும் மிரட்டவில்லை என்றும், மற்ற கட்சிகளின் உள்கட்சி விவகாரங்களில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் கூறி அவர் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
.png)