200 சர்வதேச வீரர்கள் பங்கேற்பு - மாற்றுத்திறனாளி வீரர்களுக்குத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆதரவு!
டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான ஆசிய பசிபிக் அளவிலான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், இந்தியாவிலேயே முதன்முறையாகச் சென்னையில் நடைபெறவுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களைத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (SDAT) உறுப்பினர் மேகநாத ரெட்டி செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
போட்டி குறித்த விபரங்கள்:
ஆசிய பசிபிக் டவுன் சிண்ட்ரோம் கூட்டமைப்பு (APDSF) மற்றும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் பாரத் (SOB) ஆகிய அமைப்புகள் இணைந்து இப்போட்டிகளை நடத்துகின்றன. வரும் ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இப்போட்டிகள் அரங்கேறுகின்றன.
ஆசிய பசிபிக் நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 வீரர்கள் இத்தொடரில் பங்கேற்கின்றனர். வெவ்வேறு பிரிவுகளில் மொத்தம் ஏழு போட்டிகள் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு நடத்தப்பட உள்ளன.
சிறப்பு அம்சங்கள்:
இப்போட்டிகளின் ஒரு பகுதியாக, 8 முதல் 10 வயதுடைய டவுன் சிண்ட்ரோம் குறைபாடுள்ள குழந்தைகளுக்காகச் சிறப்புப் கண்காட்சி நிகழ்வு (Exhibition Event) ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 29-ஆம் தேதி காலை தொடங்கும் இந்தப் போட்டிகள், 30-ஆம் தேதி மதியத்துடன் நிறைவடைகின்றன.
அரசின் ஆதரவு:
செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மேகநாத ரெட்டி, “மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு இந்தியாவின் வேறு எந்த மாநிலமும் செய்யாத அளவிற்குத் தமிழ்நாடு அரசு மிகப்பெரிய அளவில் உறுதுணையாகச் செயல்பட்டு வருகிறது” எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார். இத்தகைய சர்வதேச நிகழ்வைச் சென்னையில் நடத்த முன்வந்த டவுன் சிண்ட்ரோம் அமைப்பிற்குத் தனது நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
.jpg)