100 நாள் வேலை திட்டத்திற்குப் பதில் புதிய சட்டம் - மத்திய அரசை விமர்சித்ததால் வெடித்தது புதிய சர்ச்சை!
பெங்களூரு: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்த பரபரப்பு அடங்குவதற்குள், அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் அதே பாணியில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இன்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவை கூட்டுக்கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார். மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்புச் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்துத் தயார் செய்யப்பட்ட உரையை வாசிக்க மறுத்து ஆளுநர் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை, கர்நாடக அரசியலில் மிகப்பெரிய கான்ஸ்டிடியூஷனல் கிரைசிஸ் எனப்படும் அரசியலமைப்புச் சிக்கலை உருவாக்கியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையின் 2026-ம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியபோது, ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தனது உரையைத் தொடங்கினார். ஆனால், உரையில் இடம்பெற்றிருந்த சில முக்கியப் பகுதிகளுக்கு அவர் தனது 'ரிசர்வேஷன்' எனப்படும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'விசித் பாரத் - கேரண்டி ஃபார் ரோஸ்கார் அண்ட் ஆஜீவிகா மிஷன்' (VB-GRAM G Act 2025) சட்டத்தைக் கடுமையாக விமர்சித்து 11 பத்திகள் இடம்பெற்றிருந்தன. இந்தச் சட்டம் விவசாயிகளின் உரிமையைப் பறிப்பதாகவும், மாநில உரிமைகளில் தலையிடுவதாகவும் மாநில அரசு குறிப்பிட்டிருந்தது.
"மத்திய அரசைத் தேவையில்லாமல் விமர்சிக்கும் இந்தப் பகுதிகளை என்னால் வாசிக்க முடியாது" எனக் கூறி ஆளுநர் எதிர்ப்பு தெரிவிக்க, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அந்தப் பத்திகளை நீக்க 'நோ' சொல்லிவிட்டது. இதனால் 'ஆக்ரோஷ'மடைந்த ஆளுநர், தனது உரையை முழுமையாக வாசிக்காமல் ஒரு சில வரிகளை மட்டும் வாசித்துவிட்டு, அவையை விட்டு 'வாக்கிங்' சென்றார். ஆளுநரின் இந்தச் செய்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் சித்தராமையா, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரையை வாசிப்பது ஆளுநரின் கடமை; அதை அவர் புறக்கணித்தது அன்-கான்ஸ்டிடியூஷனல்" எனச் சாடியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின்படி, 100 நாள் வேலைத் திட்டம் இனி 125 நாட்களாக உயர்த்தப்பட்டாலும், நிதிப் பகிர்வு 60:40 என்ற விகிதத்தில் மாற்றப்பட்டுள்ளது மாநிலங்களுக்குப் பெரும் சுமையாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரத்தை மையமாக வைத்து ஆளுநருக்கும் - அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள 'ஈகோ' யுத்தம், அடுத்தடுத்த நாட்களில் சட்டப்போராக மாறவும் வாய்ப்புள்ளது. தென் மாநிலங்களில் ஆளுநர்கள் தொடர்ச்சியாக இப்படி வெளிநடப்பு செய்வது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு விடுக்கப்படும் சவாலாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
