"நீங்கள்தான் அடுத்த முதல்வர்" என ஆசை காட்டி ஓரங்கட்ட திட்டமா? - அம்பலமாகும் அதிரடிப் பின்னணி!
சேலம்: தமிழக அரசியல் களத்தில் 'நிமிஷத்துக்கு நிமிஷம்' திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்த எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் மீண்டும் ஒரே கூட்டணியில் சங்கமித்திருப்பது மெகா விவாதத்தைக் கிளப்பியுள்ளது. "எடப்பாடியுடன் சேர்வதற்குப் பதில் தூக்கில் தொங்குவேன்" என்று முழங்கிய தினகரன், நேற்று திடீரென அதிமுக கூட்டணிக்கு 'ஜே' போட்டதன் பின்னணியில், அண்ணாமலையுடன் இணைந்த ஒரு ரகசிய மாஸ்டர் பிளான் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தவே அமமுக-வைத் தொடங்கினார் டிடிவி தினகரன். அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடிக்கு எதிராகக் களம் கண்டார். இவர்கள் இருவரையும் கூட்டணியில் சேர்க்க எடப்பாடி 'ஸ்ட்ரிக்ட்' ஆக மறுத்து வந்த நிலையில், பாஜக தலைமை கொடுத்த அழுத்தமும், அண்ணாமலையின் பதவி பறிப்பும் காட்சிகளை மாற்றின. அண்ணாமலையைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணி என எடப்பாடி நிபந்தனை விதிக்க, அது நிறைவேறியதும் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது. இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை, எடப்பாடியின் கொங்கு மண்டல செல்வாக்கைச் சிதைக்கத் திரைக்குப் பின்னால் காய் நகர்த்தியதாகக் கூறப்படுகிறது.
பாஜக மேலிடத்தைப் பொறுத்தவரைத் தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்றிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக இப்போதைக்கு ஏற்றுக்கொண்டாலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவரை அரசியலில் இருந்தே 'அவுட்' செய்துவிட்டு, வேறொருவரை அந்த இடத்திற்குக் கொண்டு வர ரகசியத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாம். இந்தத் திட்டத்தை அண்ணாமலை மூலம் தினகரனிடம் கொண்டு செல்லப்பட்டதாகவும், "இப்போதைக்கு நீங்கள்தான் முதல்வர்" என எடப்பாடிக்கு ஆசை காட்டிவிட்டு, இறுதியில் அவரை ஓரங்கட்ட தினகரன் சம்மதித்திருப்பதாகவும் 'ஸ்கூப்' தகவல்கள் தெரிவிக்கின்றன.
துரோகிகளுக்கான நோபல் பரிசு எடப்பாடிக்குத் தான் எனச் சாடிய தினகரனும், தினகரனை 420 என விமர்சித்த எடப்பாடியும் தற்போது கைகுலுக்கிக் கொள்வது வெறும் ஐ வாஷ் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாமக அன்புமணி ராமதாஸ் ஆட்சியில் பங்கு கேட்கும் நிலையில், தனிப்பெரும்பான்மை என எடப்பாடி முழங்கி வருகிறார். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் உள்ளடி வேலைகளால் எடப்பாடி பழனிசாமிக்குச் சொந்தக் கூட்டணியிலேயே ஆபத்து காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் 'அலார்ட்' கொடுக்கின்றனர். 2026 தேர்தல் களம் அண்ணாமலை - தினகரன் கூட்டணியின் ரகசிய அஜெண்டாவால் மேலும் சூடாகியுள்ளது.
