கடந்த முறை ஏமாந்து விட்டேன்; இந்த முறை திருச்சி பிரதானமாக இருக்க வேண்டும் அமைச்சர் கே.என். நேரு கோரிக்கை!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்து கேட்புக் கூட்டம், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று (ஜனவரி 27) நடைபெற்றது. திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் குழுவின் தலைவர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திருச்சியின் வளர்ச்சி சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அமைச்சர்களின் பங்கேற்பு:
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர்கள் கோவி. செழியன், எஸ்.எஸ். சிவசங்கர், எஸ். ரகுபதி, டி.ஆர்.பி. ராஜா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் உள்ளிட்ட குழு உறுப்பினர்களும், துறைச் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
அமைச்சர் கே.என். நேருவின் கோரிக்கைகள்:
திருச்சி தேர்தல் அறிக்கையில் திருச்சிக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் கே.என். நேரு, தனது பாணியில் நகைச்சுவையாகவும், அழுத்தமாகவும் பேசினார். அழுகிற பிள்ளை தான் பால் குடிக்கும் என்பார்கள்; எங்களுக்கு வேளாண் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் சித்த மருத்துவக் கல்லூரி ஆகியவை திருச்சியில் வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
போக்குவரத்து கட்டமைப்பு:
குடமுருட்டியிலிருந்து தடுப்பணையுடன் கூடிய ஒரு பெரிய வட்டச் சாலை (Ring Road) அமைக்கப்பட வேண்டும்; அல்லித்துறை வரை நீளும் இந்தப் பெரிய வட்டச் சாலை அமைந்தால் மட்டுமே திருச்சியில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
திருச்சியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் அரசு கலைக் கல்லூரிகள் உள்ளன; ஆனால் திருச்சி கிழக்கு மற்றும் மண்ணச்சநல்லூர் தொகுதிகளில் மட்டும் இல்லை. கடந்த முறை ஏமாந்து விட்டேன்; இந்த முறை நிச்சயமாக இந்த இரண்டு தொகுதிகளுக்கும் கல்லூரிகள் வேண்டும் என அவர் நகைச்சுவையுடன் தனது கோரிக்கைகளை முன்வைத்தார்.
கனிமொழியின் உறுதிமொழி:
கூட்டத்தில் பேசிய கனிமொழி, “மக்களிடம் செல்லுங்கள், அவர்களின் கோரிக்கைகளைத் தேர்தல் அறிக்கையில் இணைத்து அதனை ஒரு ‘மக்கள் தேர்தல் அறிக்கையாக’ உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” எனக் குறிப்பிட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகம் பாரம்பரிய இயக்கமாக இருந்தாலும், தற்போதைய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களையும் இணைத்துத் தயாராக இருக்கிறது. எனவே, 2026 தேர்தல் அறிக்கை மிகவும் புதுமையான முறையில் இருக்கும் என அவர் உறுதி அளித்தார்.
சாத்தியமான அனைத்துக் கருத்துக்களும் நிச்சயமாகப் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்த அவர், கூட்டத்தில் பங்கேற்ற சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
