பத்தாயிரம் கோடி தந்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்! திருச்சியில் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் அதிரடி!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர் இன்று வீரவசனம் பேசுவதாக, தவெக தலைவர் விஜய்க்கு அமைச்சர் கே.என்.நேரு கடும் பதிலடி கொடுத்துள்ளார். விஜய்யின் அரசியல் விமர்சனங்களுக்கு திமுக தரப்பிலிருந்து வந்துள்ள இந்த எதிர்வினை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளை முன்னிட்டு, திருச்சியில் இன்று திமுக சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம், சாஸ்திரி சாலையில் தொடங்கி உழவர் சந்தை மைதானத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் முடிவில் மொழிப்போர் தியாகிகளான கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்களில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விஜய்க்கு நேரடிப் பதிலடி:
உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, புதிதாகக் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்யைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். எந்த அழுத்தத்திற்கும் பயப்பட மாட்டேன் என இன்று வீரவசனம் பேசும் நடிகர், அன்று ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்காக ஜெயலலிதாவிடம் 5 மணி நேரம் கைகட்டி நின்றது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதாவுக்குப் பயந்து ‘உங்களை எதிர்க்க மாட்டோம்’ எனக் கடிதம் கொடுத்தவர்கள், இன்று யாருக்கும் பயப்பட மாட்டேன் என்கிறார்கள் எனச் சாடினார். மேலும், கரூரில் 41 பேர் இறந்த சம்பவம் குறித்து வாய் திறக்காத விஜய், சிபிஐ விசாரணைக்குப் பயந்து பதுங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு:
தொடர்ந்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்தி திணிப்பு என்பது மொழியைத் திணிப்பது மட்டுமல்ல, அவர்களின் கலாச்சாரத்தையும் திணிப்பதுதான். ஒன்றிய அரசு கல்விக்காகத் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ₹3,548 கோடி நிதியை மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தருவோம் என நிபந்தனை விதிக்கிறது. பத்தாயிரம் கோடி தந்தாலும் எமக்கு அது தேவையில்லை; தமிழகம் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார் என்றார். 43 லட்சம் மாணவர்கள் மற்றும் 32 ஆயிரம் ஆசிரியர்களின் எதிர்காலத்தை வைத்து ஒன்றிய அரசு அரசியல் செய்வதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
தேர்தல் களம் - திமுகவின் நம்பிக்கை:
தேர்தலில் மும்முனைப் போட்டி வந்தாலும் திமுகதான் வெற்றி பெறும், ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சராவார்" எனத் தெரிவித்த கே.என்.நேரு, திருச்சி மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என உறுதிபடக் கூறினார். எடப்பாடி பழனிசாமி 'Bye... Bye ஸ்டாலின்' என்கிறார், ஆனால் மக்களோ 'Welcome ஸ்டாலின்' என அழைக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் மட்டுமே தமிழகம் வருகிறார் என்றும், அவர் ஒருபோதும் இந்தி திணிக்கப்படாது என உறுதியளிக்க மாட்டார் என்றும் அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.

