LCU மூடப்படவில்லை, மீண்டும் திறக்கப்படும்! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிரடிப் பேட்டி!

கூலி விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்; ரஜினி - கமல் இணையும் படம் தள்ளிப்போனது ஏன்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரபல இயக்குநரும் நடிகருமான லோகேஷ் கனகராஜ், தனது அடுத்தக்கட்டத் திரைப்படப் பணிகள், எல்.சி.யு (LCU) குறித்த அப்டேட்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு விரிவான விளக்கமளித்தார்.

ரஜினி - கமல் கூட்டணி தள்ளிப்போனது ஏன்?: 

கூலி' திரைப்படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் ஒரே படத்தில் இயக்கும் வாய்ப்பு வந்ததாக லோகேஷ் உறுதிப்படுத்தினார். "இருவருக்கும் தனித்தனியாகச் சென்று கதை சொன்னேன். ஆனால், அவர்கள் இருவரும் தொடர்ந்து ஆக்ஷன் படங்களிலேயே நடித்து வந்ததால், மீண்டும் ஒரு ஆக்ஷன் படம் தேவையா என்ற கேள்வி அவர்களுக்கு எழுந்தது. அவர்கள் யதார்த்தமான ஒரு படத்தை எதிர்பார்த்தார்கள்; எனக்கும் கைதி-2 பணிகள் இருந்ததால் அந்தத் திட்டம் இப்போதைக்குத் தள்ளிப்போயுள்ளது" என்று அவர் விளக்கமளித்தார்.

கூலி விமர்சனமும் சென்சார் சிக்கலும்: 

என் மீதான விமர்சனங்களில் அக்கறை உள்ளதாகவே பார்க்கிறேன், கூலி திரைப்படத்தின் எதிர்மறை விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்; தொழில் ரீதியாக அடுத்த படங்களில் அந்தத் தவறுகளைச் சரி செய்வேன் என்று அவர் வெளிப்படையாகக் கூறினார். மேலும், 'கூலி' படத்திற்குத் தணிக்கைக் குழுவினர் 35 இடங்களில் கட்  கொடுத்ததாகவும், பல இடங்களில் ஒலியை மியூட் செய்ததாகவும் தெரிவித்தார். பிணங்களை எரிக்கும் காட்சிகள் இருந்ததால் 'A' சான்றிதழ் வழங்கப்பட்டதை ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

LCU மற்றும் அடுத்தடுத்த படங்கள்:

 "எல்.சி.யு (LCU) மூடப்படவில்லை, அது மீண்டும் திறக்கப்படும்" என்று ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் செய்தியை லோகேஷ் பகிர்ந்துகொண்டார். கைதி-2 படத்திற்கு முன்பாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், அமீர்கான் உடனான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். நடிப்பு குறித்துப் பேசுகையில், "இயக்குநர் பணியை விட நடிப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. 'ஜனநாயகன்' படத்தில் சிறிய கேமியோ ரோல் செய்துள்ளேன்" என்றார்.

போதைப்பொருள் சர்ச்சைக்கு விளக்கம்: தனது படங்களில் போதைப்பொருள் காட்சிகள் அதிகமாக இருப்பது குறித்த விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், "நான் எந்தப் படத்திலும் போதைப்பொருள் நல்லது என்று காட்டவில்லை. 'Say No to Drugs' என்று என்னால் முடிந்தவரை கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். நான் படங்கள் எடுப்பதை நிறுத்திவிட்டால் இங்கே போதைப்பொருள் புழக்கம் மாறிவிடும் என்றால், இனி அத்தகைய காட்சிகளை என் படங்களில் வைக்க மாட்டேன்" என்று உருக்கமாகத் தெரிவித்தார். மேலும், நடிகையுடன் காதல் என்ற வதந்திக்கு, "எனக்கு ஏற்கனவே குடும்பம் இருக்கிறது" எனச் சுருக்கமாகப் பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk