1967 முதல் அண்ணா உருவாக்கிய இருமொழிக் கொள்கையே தமிழகத்தின் பலம் - மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் அதிரடி உரை!
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தமிழகம் கொண்டுள்ள ஆழமான எதிர்ப்பையும், திராவிட இயக்கத்தின் இருமொழிக் கொள்கையையும் விரிவாக எடுத்துரைத்தார்.
அடையாளத்தை இழக்கும் அபாயம்:
கூட்டத்தில் பேசிய அமைச்சர், "மொழி என்பது ஒரு உயிருள்ள கருவூலம்; என்னைக்கு நாம் இந்தியைத் திணிக்க விடுகிறோமோ, அன்றே நமது அடையாளத்தையும் இழந்துவிடுவோம் என்ற அச்சம் நமக்குள் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். இந்த விழிப்புணர்வைத் தலைமுறை தலைமுறையாகத் திமுக இயக்கம் மக்களிடையே கொண்டு சென்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருமொழிக் கொள்கையின் வெற்றி:
1967-இல் பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழோடு சேர்த்து உலகளாவிய தொடர்பிற்காக ஆங்கிலத்தையும் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் இருமொழிக் கொள்கையை உருவாக்கினார். அன்று முதல் இன்று வரை தமிழ்நாடு இதே கொள்கையைப் பின்பற்றுவதால்தான், தமிழர்கள் உலக அளவில் வர்த்தகம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள் என அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். தமிழர்கள் கல்வியில் இந்த நிலையை அடையக் காரணமாக இருந்தவர்கள் மொழிப்போர் தியாகிகளே என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
தேசியக் கட்சிகளின் வீழ்ச்சி:
இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் போது அன்றைய அரசு எடுத்த சர்வாதிகார முடிவுகளால், தமிழ்நாட்டில் எந்தவொரு தேசியக் கட்சியும் இன்று வரை ஆட்சி அமைக்க முடியாத நிலை நீடிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். "அன்றிலிருந்து இன்று வரை திராவிட இயக்கக் கட்சிகளே ஆட்சி நடத்தி வருகின்றன; அந்த அளவிற்கு இந்தித் திணிப்பிற்கு எதிரான எதிர்ப்பு நமது இனத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது" என அவர் தனது உரையில் பதிவு செய்தார்.
