ஆளுநருக்காகச் செலவிடும் ₹700 கோடியைப் பிள்ளைகளின் படிப்பிற்குப் பயன்படுத்தலாம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஆவேச முழக்கம்!
தஞ்சை செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்ற டெல்டா மண்டல மகளிர் அணி ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ மாநாட்டில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. மற்றும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினர். இந்த மாநாட்டில் ஒன்றிய அரசு, பிரதமர் மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவர்கள் கடுமையாகச் சாடிப் பேசினர்.
எலக்சன் காலச் சுற்றுலாப் பயணியே பிரதமர் மோடி:
மாநாட்டில் பேசிய கனிமொழி எம்.பி., பிரதமர் மோடியைத் ‘தேர்தல் காலச் சுற்றுலாப் பயணி’ என்று வர்ணித்தார். விடுமுறை காலங்களில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பிரதமர், தேர்தல் நேரத்தில் மட்டும் இந்தியா திரும்புவார். எந்த மாநிலத்தில் தேர்தல் நடக்கிறதோ, அங்கு அவரது விமானம் இறங்கும் என விமர்சித்தார். மேலும், தமிழகத்திற்கு வந்த பிரதமர் 45 நிமிடம் பேசியபோதும், மேடையில் இருந்த கூட்டணித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பெயரையோ, அதிமுகவின் பெயரையோ ஒருமுறை கூடச் சொல்லவில்லை எனச் சுட்டிக்காட்டினார். உங்கள் பெயர் சொல்லாத பெயராகவே போய்விடப் போகிறது, ஜாக்கிரதையாக இருங்கள் என்று எடப்பாடி பழனிசாமியை அவர் எச்சரித்தார்.
ஆளுநர் மாளிகைச் செலவு குறித்த விமர்சனம்:
தமிழக ஆளுநரின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய கனிமொழி, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் சொல்வதைச் செய்யாமல் ஆளுநர் அவமானப்படுத்துகிறார்" என்றார். ஒவ்வொரு ஆளுநருக்கும் ஆண்டுக்குத் தோராயமாக ₹700 கோடி செலவிடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் பணத்தை மாணவர்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்காகச் செலவிடலாம் எனத் தெரிவித்தார். பாஜக இல்லாத மாநிலங்களில் மக்களை அவமானப்படுத்தவே ஆளுநர்களை ஒன்றிய அரசு பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு:
மாநாட்டில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் தொடர் செயல்பாடுகளைப் பாராட்டினார். "மற்ற இயக்கங்கள் வருடம் அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறைதான் மாநாடு நடத்தும், ஆனால் திமுக மட்டும்தான் மாதத்திற்கு ஒருமுறை மாநாடு நடத்தி அரசின் சாதனை மற்றும் கொள்கைகளைப் பேசி வருகிறது" என்றார். இந்தித் திணிப்பிற்கு எதிராக முதன்முதலில் பெண்களைத் திரட்டிப் போராடிய தர்மாம்பாள் அம்மையார் மற்றும் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோரைத் தந்தது இந்த டெல்டா பகுதிதான் என அவர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கியது கலைஞர் தான் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
தமிழகக் குழந்தைகளுக்குத் தர வேண்டிய ₹2,500 கோடிக்கும் மேலான கல்வி நிதியை எப்போது தருவீர்கள்?
ஓசூர் விமான நிலையத் திட்டத்தை எப்போது வழங்குவீர்கள்?
முதலமைச்சர் கோரியுள்ள வெள்ள நிவாரண நிதியை எப்போது அளிப்பீர்கள்?
தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டின் எம்பிக்களின் எண்ணிக்கை குறையுமா?
சமஸ்கிருதத்திற்கு ₹2,500 கோடி ஒதுக்கிய நிலையில், தமிழுக்கு வெறும் ₹167 கோடி ஒதுக்கியது ஏன்?
பிரதமரிடம் கனிமொழி 5 கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், பிரதமர் மீண்டும் தமிழகம் வரும்போது பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்:
