நீதிமன்ற உத்தரவை மீறி 144 தடை விதித்ததா அரசு? பிப்ரவரி 2-ஆம் தேதி அதிரடித் தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இன்று தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. இந்தச் சர்ச்சைக்குரிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள், அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையைப் பிப்ரவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக நடைபெற்ற விசாரணையில், அரசு உயர் அதிகாரிகளின் செயல்பாடுகளை நீதிபதி வறுத்தெடுத்தது நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று நடைபெற்ற விசாரணையின் போது மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர் மற்றும் திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது கந்தூரி விழாவிற்காகக் கொடியேற்றப்பட்ட ‘கள்ளத்தை மரம்’ யாருக்குச் சொந்தமானது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அது கோவிலுக்குச் சொந்தமான இடம் என்று செயல் அலுவலர் ஒப்புக் கொண்ட நிலையில், அங்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து நீதிபதி சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். கோவில் இடத்தில் அனுமதியின்றி கொடியேற்றப்பட்ட விவகாரத்தில் உடனடியாகக் காவல்துறையிடம் புகார் அளிக்குமாறும் செயல் அலுவலருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றம் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய பிறகும், மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தது மற்றும் நீதிமன்றம் அத்தடையை நீக்கிய பின்னரும் காவல் ஆணையர் யாரையும் அனுமதிக்க மறுத்ததை எக்காரணத்தைக் கொண்டும் மன்னிக்க முடியாது என்று நீதிபதி ஆவேசமாகத் தெரிவித்தார். “உங்களுக்கு யாராவது வெளியில் இருந்து அழுத்தம் கொடுத்தார்களா அல்லது நீங்களாகவே இந்த முடிவை எடுத்தீர்களா?” என்று நீதிபதி கேட்டபோது, தாங்களாகவே எடுத்த முடிவு என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்தச் செயல்பாடுகளில் எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, “தவறு செய்த அதிகாரிகளைத் தண்டிக்காமல் எப்படி விடுவது? நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் வரை உங்களை விடப்போவதில்லை” என்று எச்சரித்தார். பிப்ரவரி 2-ஆம் தேதி இந்த விவகாரத்தில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.jpg)