தங்கமீன்கள் படத் தயாரிப்பாளர் சதிஷ்குமார் மீது சைபர் கிரைம் விசாரணை: 4 வாரத்தில் அறிக்கை தர உயர் நீதிமன்றம் உத்தரவு!

தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி நீதிபதி மற்றும் பைனான்சியரின் அழைப்பு விவரங்களைச் சட்டவிரோதமாகப் பெற்றதாகப் புகார்!

தேசிய விருது பெற்ற 'தங்கமீன்கள்' படத் தயாரிப்பாளர் சதிஷ்குமார், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தன்னை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை சைபர் கிரைம் காவல்துறை விரிவான விசாரணை நடத்தி நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கின் பின்னணி: 

காசோலை மோசடி முதல் சைபர் கிரைம் வரை JSK ஃபிலிம் கார்ப்பரேஷன் உரிமையாளர் சதிஷ்குமார், கடந்த 2015-ம் ஆண்டு சென்னை தி.நகரைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் ககன் போத்ராவிடம் கடன் பெற்றிருந்தார். கடனைத் திரும்பச் செலுத்த அவர் கொடுத்த 'செக்' வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்ததையடுத்து, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதித்துறை நடுவர், நீதிமன்ற ஊழியர் மற்றும் புகார்தாரர் ககன் போத்ரா ஆகியோரின் 2023-ம் ஆண்டுக்கான 'கால் டீடெயில்ஸ்' எனப்படும் தொலைப்பேசி அழைப்பு விவரங்களைச் சதிஷ்குமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 

இந்தத் தரவுகளை ஆதாரமாகக் கொண்டு, வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அவர் மனுத்தாக்கல் செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டவிரோதத் தரவுப் பகிர்வு: 

ககன் போத்ராவின் குற்றச்சாட்டுதனது அனுமதி இல்லாமலும், நீதித்துறை நடுவரின் அந்தரங்கத்தைப் பாதிக்கும் வகையிலும் இந்தத் தொலைப்பேசி அழைப்பு விவரங்களைச் சதிஷ்குமார் சட்டவிரோதமாகப் பெற்றுள்ளார் என்று ககன் போத்ரா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தன்னை மிரட்டும் செயலாகும்; இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் வாதிட்டார்.

நீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடி விசாரணை:

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், பின்வரும் முக்கியமான கேள்விகளை எழுப்பினார்:இந்தத் தொலைப்பேசி அழைப்பு விவரங்களைச் சதிஷ்குமார் போலியாக உருவாக்கினாரா?அல்லது தொலைப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து 'அபிஷியல்'  முறைப்படி பெற்றாரா?இந்த விவகாரம் குறித்து ஆழமான விசாரணை தேவை எனக் கருதிய நீதிபதி, வேப்பேரி சைபர் கிரைம் காவல்துறை இது தொடர்பாக விசாரணை நடத்தி 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 26, 2026-க்குத் தள்ளிவைத்தார்.சினிமா தயாரிப்பாளர்ஒருவர் நீதிமன்ற நடைமுறைகளிலேயே சைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தலையிட முயன்றதாக எழுந்துள்ள இந்தப் புகார், கோலிவுட் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk