பார்வையாளர் நினைக்கும் படைப்பாளியாக நான் மாறமாட்டேன் - பைசன் பாராட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் அதிரடி!
திரைப்படத் தணிக்கை வாரியத்தின் ஒருதலைப்பட்சமான போக்கு மற்றும் நடிகர் விஜய்யின் மௌனம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘பைசன்’ திரைப்படப் பாராட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், கலைத் துறையில் மத்திய அரசு செலுத்தும் ஆதிக்கம் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் வீழ்ச்சி குறித்து தனது கவலையைப் பதிவு செய்தார். குறிப்பாக, ‘ஜனநாயகன்’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய திரைப்படங்களுக்கு இழைக்கப்படும் நெருக்கடிகள் குறித்து அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
நிகழ்ச்சியில் பேசிய பெ.சண்முகம், “தணிக்கை வாரியம் என்பது தற்போது ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது. ‘பராசக்தி’ திரைப்படத்தில் வரலாற்றுச் சான்றுகளாக உள்ள காட்சிகளைக் கூட வெட்டச் சொல்லி, அப்படத்தைச் சிதைத்த பின்னரே சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதேபோல் ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்வது என்பது உள்நோக்கம் கொண்டது. கோடிக்கணக்கான முதலீடு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு அடங்கிய இப்பிரச்சினையில் நடிகர் விஜய் மௌனியாக இருப்பது ஏன்? தனக்கு இழைக்கப்படும் அநீதிக்கே வாய் திறக்காதவர், நாளை மக்கள் பிரச்சினைகளுக்காக எப்படிக் களத்திற்கு வருவார்? விஜய்யை வளைக்கவே மத்திய அரசு தணிக்கைத் துறையை ஆயுதமாகப் பயன்படுத்துகிறதா என்ற சந்தேகம் எழுகிறது” என ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதே மேடையில் உரையாற்றிய இயக்குநர் மாரி செல்வராஜ், ஒரு படைப்பாளியின் சுதந்திரம் மற்றும் சித்தாந்தப் பிடிப்பு குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். “சினிமாவைச் சினிமாக்காரர்கள் புனிதமாகப் பார்க்கலாம்; ஆனால் நான் எனது சொந்த வாழ்வின் மூலமே அரசியலைக் கற்றுக் கொள்கிறேன். கம்யூனிச மேடை எனக்கு எப்போதும் ஒரு கம்பீரமான உணர்வைத் தரும். அம்பேத்கர்தான் என்னைப் போன்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்தினார். திராவிடமோ, இடதுசாரிகளோ அல்லது அம்பேத்கரியவாதிகளோ ஒருவரைத் தனிமையில் கைவிட்ட கதையைக்கூட நான் எதிர்காலத்தில் படமாக எடுக்கலாம். பார்வையாளர்கள் விரும்புவதைச் சொல்லும் படைப்பாளியாக நான் ஒருபோதும் மாறமாட்டேன். உண்மையை நிலைநிறுத்துவது கடினமானது; அதற்குச் சரியான அரசியல் பார்வை அவசியம்” எனத் தெளிவுபடுத்தினார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற இவ்விழாவில், ‘பைசன்’ திரைப்படம் சாதியப் பாகுபாடுகளை எதார்த்தமான முறையில் கபாடி விளையாட்டின் பின்னணியில் பதிவு செய்திருப்பதாகப் பாராட்டப்பட்டது. நகரமயமாதல் வளர்ந்த சூழலிலும், வெளிநாடுகளில் கூடச் சாதிய அணித்திரட்டல்கள் நீக்கமற நிறைந்திருப்பது வேதனையளிப்பதாகப் பெ.சண்முகம் குறிப்பிட்டார். தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பாஜக கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களாக இருப்பதே இத்தனை நெருக்கடிகளுக்கும் காரணம் என்றும் அவர் தனது செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டினார்.
