'புலி' பட வருமான விவகாரம்: 'தவெக' தலைவர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராத வழக்கில் ஜனவரி 23-ல் அடுத்தகட்ட நகர்வு!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வருமானத்தை மறைத்ததாகக் கூறி, அவருக்கு விதிக்கப்பட்ட 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் செல்லும் என வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று 'ஸ்டிராங்'காக வாதிட்டுள்ளது. கடந்த 2016-17-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாகத் தொடரப்பட்ட இந்த வழக்கு, தற்போது அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் 'டாக்காக' மாறியுள்ளது.
இந்த வழக்கின் பின்னணி குறித்துப் பார்க்கையில், 2016-17 நிதியாண்டில் தனது வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என விஜய் கணக்கு காட்டியிருந்தார். ஆனால், 2015-ஆம் ஆண்டு அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், 'புலி' படத்தில் நடித்ததற்காக அவர் பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை முறையாகக் கணக்கில் காட்டவில்லை என்பதைக் கண்டுபிடித்தனர். இதன் அடிப்படையில், கடந்த 2022-ஆம் ஆண்டு அவருக்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த 'பெனால்டி' உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் ஏற்கனவே இடைக்காலத் தடை விதித்திருந்தது.
நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் இன்று நடைபெற்ற இறுதி விசாரணையின் போது, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காரசாரமான வாதங்களை முன்வைத்தார். “அபராதத் தொகையைக் காலதாமதமாக விதித்ததாக மனுதாரர் கூறுவது முற்றிலும் தவறு. விஜய் தரப்பினர் ஏற்கனவே மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுகியிருந்தனர். அந்தத் தீர்ப்பாயம் தனது முடிவை அறிவித்த பின்னரே, சட்ட விதிகளின்படி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவிதமான விதிமீறலோ அல்லது தவறுதலோ இல்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதற்கு விஜய் தரப்பினர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக தலைவர் விஜய் மீதான இந்த வருமான வரி விவகாரம் அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
