தங்க அங்கிக்கு வரவேற்பு; 18-ம் படி அருகே முழங்கிய மேளதாளங்கள் - பக்திப் பரவசத்தில் ஐயப்ப பக்தர்கள்!
மண்டல பூஜையின் சிகர நிகழ்வுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் கேரளா மாநிலம் சபரிமலையில், ஐயப்பனின் பேரருளைப் பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமான ‘கற்பூர ஆழி’ ஊர்வலம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. சன்னிதானமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய இந்த ஊர்வலம் ஐயப்ப பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
வரும் டிசம்பர் 26-ஆம் தேதி திருவிதாங்கூர் மகாராஜா வழங்கிய 451 பவுன் தங்க அங்கியில் ஐயப்பனுக்கு ‘மகா தீபாராதனை’ நடைபெறவுள்ளது; அதனைத் தொடர்ந்து டிசம்பர் 27-ஆம் தேதி பிரதான ‘மண்டல பூஜை’ நடைபெறுகிறது. இதற்கு முன்னோடியாகவும், தங்க அங்கிக்கு வரவேற்பு அளிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் காவல்துறை சார்பில் நடத்தப்படும் ‘ஆழி பவனி’ இன்று மேளதாளங்கள் முழங்கத் தொடங்கியது. சபரிமலை தந்திரிகள் கண்டரரு மகேஸ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி ஆகியோர் கற்பூரம் நிறைந்த கலசத்தில் தீபமேற்றி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தனர். கேரள டிஜிபி ராவ்டா சந்திரசேகர், ஏடிஜிபிகள் ஸ்ரீஜித், வெங்கடேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய படை வீரர்கள் இந்த ஆன்மீகப் பேரணியில் திரளாகப் பங்கேற்றனர்.
ஊர்வலத்தில் ஐயப்பன் புலி மேல் அமர்ந்து பவனி வரும் காட்சி பக்தர்களைச் சிலிர்க்க வைத்தது; சிவன், பார்வதி, பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட தெய்வ வேடமிட்டவர்களின் நடனம் மற்றும் வண்ண விளக்குகள் மிளிரும் காவடியாட்டங்கள் சன்னிதானத்தை அதிரச் செய்தன. செண்டை மேளம் மற்றும் பஞ்சவாத்யம் முழங்க, தங்கக் கொடி மரத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் 18-ஆம் படி அருகே நிறைவுற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்ற சரண கோஷம் எழுப்பியபடி, ஊர்வலத்தைக் கண்டு தரிசித்து மெய்மறந்து நின்றனர்.
