துரோக அதிமுக-வில் ஓபிஎஸ் இணைய மாட்டார்; பொங்கலுக்குப் பின் பெரிய திருப்புமுனை காத்திருக்கிறது!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக அரசியலில் நிலவும் கூட்டணிக் குழப்பங்கள் மற்றும் தவெக-வின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அவர் ஆவேசமாகப் பதிலளித்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த செங்கோட்டையன், "முதலில் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, அவரது அணியின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துக்களைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அதிமுக-வில் இணையப்போவது இல்லை என்பதிலும், துரோகத்திற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்பதிலும் அவர்கள் உறுதியாக உள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரை, வரும் தை பொங்கல் முடிந்த பிறகு தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையைப் பார்க்கலாம்" எனத் தெரிவித்தார்.
தவெக-வின் கூட்டணி மற்றும் கொள்கை குறித்துப் பேசிய அவர், "நாங்கள் யாரை எதிர்க்கிறோம் என்பதை ஈரோடு மாநாட்டின் போதே மக்கள் கோஷமிட்டுத் தெளிவுபடுத்திவிட்டனர். கொள்கை ரீதியாகப் பாரதிய ஜனதா கட்சியை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அதிமுக-வில் இருந்து அதிருப்தியாளர்கள் பலர் எங்களுடன் இணைய வருவார்கள். ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவது உண்மைதான். ஆனால், அவர்கள் எப்போது இறுதி முடிவை எடுப்பார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். தமிழக வெற்றிக் கழகத்தில் என்னைப் போன்றவர்களுடன் பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர்" என்றார்.
மேலும், தவெக தலைவர் விஜய்யின் மலேசியப் பயணம் குறித்துப் பேசுகையில், "வரும் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் மலேசியாவில் விஜய்க்குச் சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளன. அங்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அதையெல்லாம் தாண்டி அவர் மக்கள் மனதை வென்று நிற்கிறார். மலேசியப் பயணத்திற்குப் பிறகு அவர் தமிழகத்தில் மேற்கொள்ளவிருக்கும் மாவட்ட வாரியான சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் பயணத்தைப் போல, விஜய்யின் இந்தப் பயணமும் மிகுந்த மகிழ்ச்சியையும் எழுச்சியையும் தருகிறது. 2026-ல் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது" என உறுதிபடத் தெரிவித்தார்.
