ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் சினிமா பாணி திகில்: ஒரு கிலோ மீட்டர் தூரம் உருண்ட டயரை உயிரைப் பணையம் வைத்துப் பிடித்த ஒளிப்பதிவாளர்!
கோவை: கோயம்புத்தூரில் புதிதாகத் திறக்கப்பட்ட பிரம்மாண்டமான ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் இன்று பிற்பகல் அரங்கேறிய ஒரு சம்பவம், அங்கிருந்த வாகன ஓட்டிகளைப் பீதியில் உறைய வைத்தது. நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளிக்குச் சொந்தமான வாகனம், அவிநாசி சாலை மேம்பாலத்தில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனத்தின் ஒரு சக்கரம் திடீரெனக் கழன்று தனியாக உருண்டோடியது.
பாலத்தின் சரிவான பகுதியில் அந்த டயர் அசுர வேகத்தில் முன்னேறிச் செல்ல, மூன்று சக்கரங்களுடன் தள்ளாடிய பள்ளி வாகனத்தை ஓட்டுநர் தனது அபார சாமர்த்தியத்தால் கட்டுப்படுத்தி, பாலத்தின் ஓரத்தில் பாதுகாப்பாக நிறுத்தினார். அந்தச் சமயம் வாகனத்தில் பள்ளி மாணவர்கள் யாரும் இல்லாததால், ஒரு மாபெரும் உயிர்ச் சேதம் அதிர்ஷ்டவசமாகத் தவிர்க்கப்பட்டது. வாகனத்திலிருந்து கழன்ற அந்தச் சக்கரம், பாலத்தின் சரிவில் நிற்காமல் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தறிகெட்டு உருண்டு சென்றது.
பாலத்தில் மற்ற வாகனங்கள் மீது அந்த டயர் மோதியிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். அந்தச் இக்கட்டான தருணத்தில், செய்தி சேகரித்துவிட்டு அதே பாதையில் வந்து கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஆயூப், நிலைமையை உணர்ந்து மின்னல் வேகத்தில் செயல்பட்டார். உயிரைப் பணையம் வைத்து அந்த டயரைத் துரத்திச் சென்ற அவர், மிகவும் லாவகமாக உருண்டோடிய சக்கரத்தைப் பிடித்து நிறுத்தினார்.
பின்னர் அதனைச் சிரமப்பட்டுத் தூக்கிச் சென்று பள்ளி வாகன ஓட்டுநரிடம் ஒப்படைத்தார். நெரிசல் மிகுந்த அவிநாசி சாலை மேம்பாலத்தில், ஒரு மாபெரும் விபத்து நேரவிருந்த சூழலில் ஒளிப்பதிவாளர் ஆயூப் காட்டிய இந்தத் துணிச்சலும், நேர உணர்வும் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. "சக்கரம் கழன்று ஓடிய வேகத்தைப் பார்த்தபோது ஏதோ சினிமா காட்சி போலவே இருந்தது, ஆனால் ஒளிப்பதிவாளர் செய்த இந்த உதவி ஒரு பெரிய விபத்தைத் தடுத்து நிறுத்திவிட்டது" என நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் வெகுவாகப் பாராட்டிச் சென்றனர். பள்ளி வாகனங்களின் பராமரிப்பு குறித்துப் பொதுமக்களிடையே அச்சம் எழுந்தாலும், ஒரு தனி மனிதனின் துரித நடவடிக்கை இன்று ஒரு பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்துள்ளது கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
in
தமிழகம்

