பந்தநல்லூர் ஆசிரியை வீட்டில் துணிகர கொள்ளை; திருடர்கள் விட்டுச் சென்ற பைக்குகளால் சக்கிய துப்பு!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் விளத்தொட்டி கிராமத்தில், அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரை முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் தாக்கி, கட்டிப்போட்டு நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் ‘திக் திக்’ நிமிடங்களை ஏற்படுத்தியுள்ளது. பந்தநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் செந்தமிழ்ச்செல்வி (54), தனது கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் மகனுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு அவர் வீட்டில் தனியாக அமர்ந்து மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்திக் கொண்டிருந்தபோது, சுமார் ஏழு பேர் கொண்ட ‘மங்கி குல்லா’ கும்பல் மின்னல் வேகத்தில் வீட்டிற்குள் புகுந்தது.
திடீரென உள்ளே நுழைந்த அந்த முகமூடித் திருடர்கள், ஆசிரியையின் முகத்தை துணியால் அமுக்கி, கைகளை வலுக்கட்டாயமாகக் கட்டிப்போட்டு ‘அட்டூழியம்’ செய்துள்ளனர். அவர் அணிந்திருந்த 8 பவுன் தாலிச் செயின் மற்றும் பணத்தைப் பறித்துக் கொண்டிருந்தபோது, பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்த அவரது மகன் எதிர்பாராத விதமாக வீட்டிற்கு வந்துள்ளார். மகனைக் கண்டதும் ‘அலர்ட்’ ஆன கொள்ளையர்கள், பின்பக்கக் கதவு வழியாகத் தப்பி ஓடினர். தாய் மற்றும் மகனின் அலறல் சத்தம் கேட்டுத் திரண்ட அக்கம் பக்கத்தினர் கொள்ளையர்களைத் துரத்தினர். இதில் கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு வந்த இரண்டு இருசக்கர வாகனங்களை அங்கேயே போட்டுவிட்டு இருட்டில் மறைந்து தப்பினர்.
பொதுமக்கள் பறிமுதல் செய்த அந்த வாகனங்களை பந்தநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு செய்தனர். ‘ஸ்பாட்’டில் கிடைத்த பைக்குகளை வைத்துத் திருடர்களைப் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர். "திருடர்களை உடனடியாகப் பிடிக்காவிட்டால் ஊர் மக்களைத் திரட்டிப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என விளத்தொட்டி கிராம மக்கள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர். தனியாக இருந்த பெண்ணைக் குறிவைத்து நடந்த இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
