திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்குச் சென்னை நீதிமன்றம் ஆப்பு; 48 லட்சத்தை அபராதமாகக் கட்டவும் நீதிபதி உத்தரவு!
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்குச் செக் மோசடி வழக்கில் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்துச் சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 'திருப்பதி பிரதர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்ட கடன் விவகாரத்தில் இந்த ‘ஷாக்’ ஆக்சன் எடுக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் லிங்குசாமிக்குச் சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் ஃபிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கடந்த 2016-ஆம் ஆண்டு பேஸ்மேன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் 35 லட்ச ரூபாய் கடன் பெற்றிருந்தது. நீண்ட நாட்களாகியும் இந்தக் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து தற்போது நிலுவைத் தொகை 48 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. இந்தக் கடனை அடைக்க லிங்குசாமி தரப்பில் வழங்கப்பட்ட காசோலை (Check), வங்கியில் பணம் இல்லாமல் ‘பவுன்ஸ்’ ஆகித் திரும்பியது.
இதனைத் தொடர்ந்து, பேஸ்மேன் ஃபைனான்ஸ் உரிமையாளர் ராகுல் குமார் சார்பில் வழக்கறிஞர் சதீஸ்ராஜ், சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, செக் மோசடி புகார் நிரூபிக்கப்பட்டதால் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்தார். இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி, நிலுவைத் தொகையான 48.68 லட்ச ரூபாயைப் புகார்தாரருக்கு வழங்க வேண்டும் என்றும், தவறினால் கூடுதலாக இரண்டு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அதிரடியாகத் தீர்ப்பளித்தார். திரையுலகில் இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
