போலி வாக்களிப்புச் சோதனையின் அச்சு பிரதிகளே: நம்பகத்தன்மை பாதிக்கப்படவில்லை எனத் தேர்தல் ஆணையம் விளக்கம் – FIR பதிவு!
பிஹார் சட்டசபைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், சமஸ்திபூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் VVPAT அச்சு சீட்டுகள் குப்பையாகக் கிடந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் குளறுபடி தொடர்பாக உடனடியாக ஒரு தேர்தல் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனினும், தேர்தலின் நம்பகத்தன்மை பாதிக்கப்படவில்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
சரைரஞ்சன் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே, சாலையோரத்தில் குப்பையாகக் கிடந்த VVPAT சீட்டுகளை ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் உத்தரவின் பேரில், மாவட்ட ஆட்சியர் உடனடியாகச் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின்னர், மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டுத் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட VVPAT சீட்டுகள், உண்மையான வாக்குப் பதிவைச் சேர்ந்தவை அல்ல. அவை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன், போலி வாக்களிப்புச் சோதனையின் (Mock Poll Test) போது அச்சிடப்பட்ட அச்சுப் பிரதிகள் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மை எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும், இந்த உண்மை அனைத்து வேட்பாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியரால் முறையாக அறிவிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
VVPAT சீட்டுகள் போன்ற முக்கியமான தேர்தல் ஆவணங்களைச் சரியாகக் கையாளாத இந்த அலட்சியத்திற்குக் காரணமான உதவித் தேர்தல் அதிகாரி உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அத்துடன், அவர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், தேர்தல் நிர்வாகத்தில் ஆவணங்களைக் கையாள்வதில் உள்ள குறைபாடுகளைப் பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளது.
