தலையிலும், தோள்பட்டையிலும் காயங்கள்; மருத்துவமனையில் சிகிச்சை – கட்டிட பராமரிப்பு கேள்விக் குறியானது!
தஞ்சாவூர் மாவட்டம், நெய்வாசல் கிராமத்தில் செயல்பட்டு வந்த கிராம நிர்வாக அலுவலர் (VAO) கட்டிடத்தின் மேற்கூரை திடீரெனப் பெயர்ந்து விழுந்ததில், நில ஆவணங்களுக்காக வந்திருந்த இரண்டு பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம், பழுதடைந்த அரசு கட்டிடங்களின் பராமரிப்பு குறித்துப் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒரத்தநாடு நெய்வாசல் பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம் (65) மற்றும் பாண்டியன் (50) ஆகிய இருவரும், தங்களுக்குச் சொந்தமான நிலத்திற்குரிய அடங்கல் சான்றிதழ் வாங்குவதற்காக நெய்வாசல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்தனர்.அவர்கள் இருவரும் அலுவலகத்திற்குள் இருந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் பழைய மேற்கூரை திடீரெனப் பெயர்ந்து அவர்கள் மீது விழுந்தது. இதில், பாலசுந்தரத்துக்கு தலையிலும், பாண்டியனுக்கு தோள்பட்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, கிராம நிர்வாக அலுவலகம் போன்ற பொதுமக்கள் அதிக அளவில் வரும் கட்டிடங்களைப் பராமரிக்கத் தேவையான உடனடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே வலுப்பெற்றுள்ளது.
