பெப்பர் ஸ்பிரே கொண்டு செல்லுங்கள்: வன்முறையைக் கட்டுப்படுத்த திமுக அரசுக்கு அதிரடி அறிவுறுத்தல்!
சட்டவிரோத மதுபான பார்: காவல்துறையின் அலட்சியமே காரணம் – விசாரணையில் என்கவுண்டர் தீர்வாகாது என வானதி சீனிவாசன் முழக்கம்!
கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும், மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பின்மை அதிகரிப்பதாகக் குற்றஞ்சாட்டியும், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் விமான நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில், நேற்று இரவு முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள், அவர்களைத் தாக்கி, அந்த மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆர்ப்பாட்டம் மற்றும் முழக்கங்கள்:இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் வானதி சீனிவாசன் தலைமையில் பாஜக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெண்கள் பாதுகாப்பாக நடமாட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பெப்பர் ஸ்பிரே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தீப்பந்தங்களை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்களை சுட்டுக் கொல்லச் சட்டம் வேண்டும் என்றும், திமுக அரசு பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த வானதி சீனிவாசன், இந்தச் சம்பவம் கோவைக்கு ஏற்பட்ட அவமானம் என்றார். மேலும், அவர் காவல்துறை மற்றும் ஆளும் அரசு மீது பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பாலியல் வன்கொடுமை நடந்த இடத்தில் சட்ட விரோதமாக மதுபான பார் இயங்கி வந்தது. அதை காவல்துறை கண்டு கொள்ளாதது அவர்களின் அலட்சியத்தைக் காட்டுகிறது. மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகும் விஷயம் நடந்தால், காவல்துறை என்கவுண்டர் என முடித்துவிடுகிறது.
என்கவுண்டரால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதுதான் உண்மை. குற்றத்தைத் தடுப்பதும், கடும் நடவடிக்கை எடுப்பதும்தான் தீர்வு. காவல்துறையின் ரோந்துப் பணிகள் செயல்பாடு மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. ஆட்சியாளர்களுக்கு டிராமா செய்ய நேரம் உள்ளது, குடும்பத்தைப் பார்க்க நேரம் உள்ளது. ஆனால், பெண்களைப் பார்க்க நேரம் இல்லை. என்றும், "இருக்கும் நான்கு மாதத்திலாவது பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குடியரசுத் துணைத் தலைவர் வருகையின்போது பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த இரண்டு இளைஞர்கள் யார்? அவர்களின் பெயரைச் செய்திக்குறிப்பில் ஏன் வெளியிடவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.மேலும், நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நாளை மறுநாள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
