தகவல்களை அதிகாரப்பூர்வமாக்கவும், வதந்திகளைத் தடுக்கவும் புதிய முயற்சி: முத்தரசி ஐ.பி.எஸ். நியமனம்!
தமிழக காவல்துறையில் முதல் முறையாக, செய்தி தொடர்பு அதிகாரி (Public Relations Officer - PRO) என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, இந்தப் பொறுப்பிற்கு ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 2002ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியான முத்தரசியை இந்தப் புதிய பொறுப்புக்கு நியமித்துத் தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையில் இந்தப் பதவி இதுவரை உருவாக்கப்படாத நிலையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிகாரிகளே காவல்துறைக்கான செய்தித் தொடர்பாளர்களாக இருந்து வந்தனர். முன்னாள் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமையின்போது, ஊடகங்களில் காவல்துறை தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையின்போது தவறான தகவல்கள் (வதந்திகள்) பகிரப்படுவதைத் தடுக்கவும் இந்தப் பொறுப்பு தேவை எனப் பரிந்துரைக்கப்பட்டது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரிதான் இனி காவல்துறை சார்பில் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பார் என்றும் அதிகாரப்பூர்வத் தகவல்களை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
ஐ.பி.எஸ். அதிகாரி முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்தவர். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், சிபிசிஐடியில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். மேலும், முக்கிய வழக்குகளைக் கையாண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான தகவல்தொடர்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்கான முக்கிய நடவடிக்கையாக இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.
%20Role%20in%20Tamil%20Nadu%20Police.jpg)