திருவண்ணாமலை ஊத்தங்கல் கிராமம்: ஆன்லைன் பட்டா பதிவு குளறுபடி: 1999-ல் வழங்கப்பட்ட இலவச பட்டாக்களை மீட்டுத் தர மக்கள் கோரிக்கை.. கிராம மக்கள் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்தங்கல் கிராமத்தில், 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்கிய வீட்டுமனைப் பட்டாக்கள், தற்போது வருவாய்த் துறையின் ஆன்லைன் பதிவேட்டில் வேறு நபர்களின் பெயரில் மாற்றப்பட்டிருப்பதைக் கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஊத்தங்கல் கிராமத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு (திமுக ஆட்சிக் காலத்தில்), சுமார் 45 நபர்களுக்கு அவர்கள் அனுபவித்த இடத்துக்கு அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இந்த 45 பேரில் 26 பேர் வீடு கட்டி வசித்து வரும் நிலையில், மீதமுள்ள 19 பேர் தங்கள் பட்டா இடங்களைக் காலி மனைகளாகவோ அல்லது மாடு கட்டும் இடங்களாகவோ பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் 2024 ஆம் ஆண்டு வருவாய்த் துறை பதிவேடுகள் அனைத்தும் ஆன்லைனில் ஏற்றப்பட்டபோது இந்தப் பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது.
ஊத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம்மாள், சின்னராஜ், சம்பத், ஜெயபாலன், ஏழுமலை உள்ளிட்ட 19 பேரின் 1999 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டா நிலங்கள், தற்போது வருவாய்த் துறை ஆன்லைன் கணக்குகளின்படி, ஓர் திமுக பிரமுகர் மற்றும் அவரது குடும்பத்தார் பெயர்களில் பட்டா மற்றும் சிட்டாக்கள் மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
புதிய பட்டா உரிமையாளர்கள் எனக் கூறப்படும் நபர்கள், ஜேசிபி இயந்திரங்களுடன் வந்து அந்த இடங்களைத் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி ஆக்கிரமிக்க முயற்சி செய்தபோது, உண்மையான பட்டா வைத்திருக்கும் கிராம மக்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தித் தகராறில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட 19 பேருக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து, தாங்கள் முன்பு அரசாங்கம் வழங்கிய பட்டாவை அரசு கணக்கில் ஏற்றாமல் வேறு நபர்களின் பெயர்களுக்கு மாற்றி சிட்டா வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, தங்களுக்கு 1999 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டாவில் உள்ளது போலவே, தங்கள் பெயருக்கே வருவாய்த் துறை கணக்கில் பெயர் மாற்றம் செய்து, மீண்டும் புதிய பட்டா மற்றும் சிட்டாக்களை வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
