கோவையில் த.மா.கா. மனித சங்கிலிப் போராட்டம்: குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை கோரிக்கை; கூட்டணி குறித்துப் பேச்சு!
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைக் கண்டித்தும், மாநிலத்தில் சீர்குலைந்துள்ள சட்டம்-ஒழுங்கு நிலையை எதிர்த்தும், தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் இன்று மாலை கோவை அவிநாசி சாலை கோல்ட் வின்ஸ் பகுதியில் மனித சங்கிலிப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. வாசன், தி.மு.க. அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்த நிலையில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் எனத் தொடர்ந்து நடந்து வருகின்றது. போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையில் தென் இந்தியாவில் மோசமான மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது.
கோவை பாலியல் பிரச்சனை இதற்கு ஒரு சரியான எடுத்துக் காட்டு. இது திராவிட மாடல் அரசின் தோல்வியை காட்டுகிறது. அரசு மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மையே இதற்குக் காரணம். இந்தச் சம்பவங்களுக்கு அடித்தளம் போதைப் பொருள் நடமாட்டமும், டாஸ்மாக்கும் தான். ஒரு புறம் மகளிர் கிரிக்கெட்டில் சாதனையை கொண்டாடும் வேளையில், மற்றொருபுறம் பாலியல் வன்முறை சோதனையையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.
காவல்துறைக்கு ஏன் இந்தச் சுணக்கம்? அவர்கள் கை கட்டப்பட்டு உள்ளது. காவல்துறை கைகள் கட்டப்பட்டு இருப்பதற்குக் காரணம் அரசு தான். ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்த பிறகு, முன்னெச்சரிக்கைச் சரியாகச் செய்யாமல், அதன் பிறகு குற்றவாளியைக் கண்டுபிடித்து விட்டோம் எனத் தம்பட்டம் அடைவது வேதனையைத் தருகிறது, வருத்தத்தைத் தருகிறது. இதுபோன்ற மிருகத்தனமான செயலில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இந்த அரசு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடையும். அதற்கு அடித்தளமாக மகளிர், மாணவர்களின் ஓட்டும் அமையும்.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜி.கே. வாசன், எதிர்வரும் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசினார்.
தமிழகத்தில் அதிமுக, பாஜக, த.மா.கா கூட்டணி வெற்றி அணியாக, முதன்மை அணியாக இருந்து கொண்டு இருக்கிறது. ஓரிரு மாதங்களில் எங்களோடு பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒத்த கருத்து உடையவர்கள், தி.மு.க-வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு சேர முடிவெடுக்க வேண்டும். இந்தக் குறிக்கோளை மக்களிடம் கொண்டு செல்ல அதிமுக, பாஜக, த.மா.கா கூட்டணி எடுத்துச் செல்கிறது.
