திருமணத்தை ஊரறிய நடத்த அழைத்துச் சென்று ராய்ப்பூரில் அடைத்து வைத்துக் கொடுமை – புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார்!
இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்துத் திருமணம் செய்த மனைவியைத் தனது உறவினர்கள் ராய்ப்பூரில் அடைத்து வைத்துத் துன்புறுத்துவதாகக் குற்றஞ்சாட்டி, சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஷ்ணு ஹரி (20), புளியந்தோப்பு ஜேஜே நகரைச் சேர்ந்தவர். பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணுடன் கடந்த ஒரு வருடமாகக் காதலித்து வந்துள்ளார். அக்டோபர் 4ஆம் தேதி, வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடப்பதாகப் பெண் விஷ்ணு ஹரியைத் தொடர்பு கொண்டு, தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.இதையடுத்து, மதுரைக்கு வரவழைக்கப்பட்ட அந்தப் பெண்ணை, விஷ்ணு ஹரி மதுரை ரயில்வே காலனியில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்துத் திருமணம் செய்து, அன்றே சென்னைக்கு அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்துள்ளார்.
இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்டோபர் 6ஆம் தேதி சென்னை புளியந்தோப்பிற்கு வந்துள்ளனர். அப்போது, "இருவரும் ஒரே சமூகம் என்பதால் திருமணத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சொந்த பந்தங்களுக்குச் சொல்லி ஊரறியச் சீரும் சிறப்புமாக நாங்களே நடத்தி வைக்கிறோம்" என்று நம்பிக்கை வார்த்தைகள் கூறி, அந்த இளம்பெண்ணை அவர்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.அழைத்துச் சென்ற பிறகு, முதல் இரண்டு வாரங்கள் மட்டுமே விஷ்ணு ஹரியுடன் அந்தப் பெண் செல்போனில் பேசியுள்ளார். அதன்பிறகு அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் வேறு ஒரு செல்போன் எண்ணிலிருந்து விஷ்ணு ஹரியைத் தொடர்பு கொண்ட அவரது காதல் மனைவி, தன்னை ராய்ப்பூரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து அடித்துத் துன்புறுத்துவதாகவும், அங்கிருந்து மீட்டுச் செல்லுமாறும் கதறியுள்ளார்.இதையடுத்து, தனது காதல் மனைவியை மீட்டுச் சேர்த்து வைக்குமாறு கல்லூரி மாணவர் விஷ்ணு ஹரி, சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.காவல் நிலையத்தில் அவர் கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்தவர்களை உருக வைத்தது.விஷ்ணு ஹரியின் புகாரின் பேரில், புளியந்தோப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
