வீரப்பன் தேடுதல் வேட்டை பாதிப்பு: மீதமுள்ள ₹2.59 கோடி உடனடியாகச் செலுத்த உயர் நீதிமன்றம் அதிரடி! Veerappan STF Victims: Madras HC Orders Immediate Release of Remaining ₹2.59 Crore Compensation
இழப்பீட்டை வழங்காதது நீதிமன்ற அவமதிப்பு: பாதிக்கப்பட்டவர்கள் வழக்கில் அரசுக்குக் கடும் கண்டனம்!
தொழிலதிபர்கள் மீது வழக்கு தொடரலாமே தவிர, ஏழை மக்களுக்கு எதிராகவா? – நீதிபதிகள் அனல் கேள்வி!
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் வேட்டையின்போது சிறப்பு அதிரடிப்படையால் (STF) பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.2 கோடியே 59 லட்சம் ரூபாயை உடனடியாக விடுவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, அதிரடிப்படையினர் விசாரணை என்ற பெயரில் மலை கிராமப் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆண்களைச் சித்ரவதை செய்ததாகவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்களை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, தமிழக அரசு ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட 38 பேருக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்கியது.மீதமுள்ள ரூ.3 கோடியே 79 லட்சம் பாக்கித் தொகையை வழங்க ஆணையம் உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழகத் தலைமைச் செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில், இரண்டாவது தவணையாக மேலும் ரூ.1 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.8 கோடி செலவில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இழப்பீடு தொகையை வழங்குவதுடன், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியதும் அரசின் கடமையே எனச் சுட்டிக்காட்டினர்.
இழப்பீடு தொகை வழங்க உத்தரவு பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்று அதிர்ச்சி தெரிவித்தனர். இதற்காகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகை மக்களின் பணம், அரசுப் பணம் அல்ல. மக்களின் பணத்துக்கு அரசு அறங்காவலர் மட்டுமே என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதை எதிர்த்துத் தமிழக அரசு வழக்குத் தாக்கல் செய்ததைக் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தொழில்துறையினருக்கும், வர்த்தகர்களுக்கும் எதிராக வழக்கு தொடரலாமே தவிர, பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு எதிராக வழக்கு தொடரலாமா?" என்றும் கடும் கேள்வி எழுப்பினர்.
நீதிபதிகள், ரூ.5 கோடி இழப்பீட்டுத் தொகையில் ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.2 கோடியே 41 லட்சம் போக, மீதமுள்ள ரூ.2 கோடியே 59 லட்சம் ரூபாயை உடனடியாக விடுவிக்கும்படி சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்த, தமிழகத் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டனர்.மேலும், பாக்கி இழப்பீடு தொகை வழங்கியது குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 4 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
.jpg)