‘நம்ம கல்லூரி கெத்து’ எனக் கூறி மோதல்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு – புழல் சிறையில் அடைக்கப்பட்ட நவீன்!
பச்சையப்பன் கல்லூரி மாணவனைத் திருத்தணி ரயில் நிலையத்தில் வைத்து வீண் தகராறு செய்து வெட்டிய வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவன் நவீன் மீது இன்று குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. பொது ஒழுங்கையும் அமைதியையும் குலைக்கும் வகையில் செயல்பட்டதால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 29, 2025 அன்று திருவள்ளூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் துளசிராமன், பச்சையப்பன் கல்லூரிக்குச் சென்றுவிட்டு மின்சார ரயில் மூலம் திருத்தணி ரயில் நிலைய நடைமேடையில் இறங்கினார். அப்போது, அங்கு ஏற்கனவே நின்றிருந்த மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவன் நவீன் என்பவர், துளசிராமனைப் பார்த்து “உங்க கல்லூரி கெத்தா?” என வீண் தகராறு செய்து, அசிங்கமாகத் திட்டி, கன்னத்தில் அறைந்துள்ளார்.
மேலும், பட்டாக் கத்தியை எடுத்து வெட்ட வந்தபோது, துளசிராமன் இரு கைகளால் தடுத்ததால் முழங்கையில் காயம் ஏற்பட்டது. நவீன் பட்டாக் கத்தியைக் காட்டி, எவராவது தடுத்தால் அனைவரையும் வெட்டிவிடுவேன் என மிரட்டியதாகவும், இது தொடர்பாக அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் (Special Team Police), கடந்த அக்டோபர் 11, 2025 அன்று நவீனைத் திருத்தணி பேருந்து நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்து, நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்திப் புழல் சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், நவீன் மீது ஏற்கனவே அரக்கோணம் மற்றும் எழும்பூர் ரயில்வே காவல் நிலையங்களில் ரயில்களில் தகராறு செய்ததாக 2 வழக்குகளும், சென்னை அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், திருத்தணி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
முன்னாள் மாணவன் நவீன் தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்களை 'நம்ம கல்லூரிதான் கெத்து' என்று கூறி, கெத்து காட்டும்படி வற்புறுத்தியும், பழைய வீடியோக்களைக் காட்டி மாணவர்களிடம் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்துவது மட்டுமன்றி, தற்போது படிக்கும் இரு கல்லூரி மாணவர்களிடையே மோதலைத் தூண்டியும், ரயில் பயணிகளுக்கு இடையூறு செய்தும், பொதுச் சொத்தை சேதப்படுத்தியும் வந்திருப்பது தெரியவந்தது.
இதன் காரணமாக, நவீன் பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்குப் பாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், அவரைப் பொது ஒழுங்கு மற்றும் அமைதியைப் பேணும் பொருட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டது. இந்தப் பரிந்துரையின் பேரில், நவீனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் இன்று (08.11.2025) ஆணை வழங்கியுள்ளார். இந்த ஆணை நகல், இன்று புழல் மத்திய சிறையில் சார்வு செய்யப்பட்டது.
