பாகிஸ்தான் அணு உலைகளைத் தாக்க இந்திரா திட்டமிட்டாரா? 1981 சிஐஏ ஆவணத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான உந்து சக்தியாக (Driving Force) இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே இருந்தார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் உளவுத்துறை நிறுவனமான சிஐஏ-வில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி கே.பி. பாரோ என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் இந்தக் கோட்பாட்டை முன்வைத்துள்ளார். இந்தப் புதிய தகவல், இந்தியா-பாகிஸ்தான் அணு ஆயுதப் போட்டியில் ஒரு புதிய கோணத்தை முன்வைக்கிறது.
1971-ஆம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் படுதோல்வியைச் சந்தித்து, வங்க தேசம் என்ற புதிய நாடு உருவானது. இது பாகிஸ்தானை ஆழமாகப் பாதித்தது. அச்சமயத்தில் இந்தியப் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி, பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக யூகித்ததாகவும், அதற்கு முன்பாக தற்காப்பிற்காக இந்தியா பாகிஸ்தானின் ராணுவத் தளங்களைத் (Military Installations) தாக்கி அழிக்க வேண்டும் என தீவிரமாகத் திட்டமிட்டதாகவும் கே.பி. பாரோ தனது கட்டுரையில் வெளியிட்டுள்ளார்.
இந்திரா காந்தியின் இந்தக் கறார் முடிவுதான், பாகிஸ்தான், 'இஸ்லாமிய குண்டு' எனும் தங்கள் நாட்டின் பிரத்யேக அணு ஆயுதத்தை உருவாக்க உண்மைக் காரணமாக அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1981-ஆம் ஆண்டு சிஐஏ சார்பில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட 'பாகிஸ்தானின் அணுசக்தி முன்னேற்றங்களுக்கு இந்தியா எவ்வாறு பதிலளிக்கும்' என்ற தலைப்பிலான ரகசிய ஆவணத்தில் (Declassified Document) இந்திரா காந்தியின் இந்தத் தாக்குதல் திட்டம் குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பயமுறுத்தும் திட்டத்தின் காரணமாகவே பாகிஸ்தான் அணு ஆயுதம் உருவாக்குவதை உடனடியாக விரைவுபடுத்தியது என்றும் அவர் திட்டவட்டமாகக் (Categorically) குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூற்று உண்மையெனில், இரு அண்டை நாடுகளுக்கு இடையேயான அணு ஆயுதப் பந்தயத்தின் வரலாறு புதிய பரிமாணத்தை அடையும்.
