கோப்பை இல்லாமல் சந்தித்தோம், இப்போது சாதித்து வந்தோம்: கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நெகிழ்ச்சி; பிரதமர் அளித்த உற்சாக பதில்!
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஐசிசி மகளிர் உலகக்கோப்பையை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர், இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். ஆடவர்கள் மட்டுமே சாதித்த துறையில் தங்களுடைய பங்கை நிலைநிறுத்தி உலகுக்கே முன்மாதிரியாகச் சாதித்த வீராங்கனைகளைப் பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார்.
அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 2017ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லாமல் பிரதமர் மோடியைச் சந்தித்ததை நினைவு கூர்ந்தார். இப்போது வெற்றி வாகை சூடி அவரைச் சந்தித்தது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். நிகழ்காலத்தில் எப்போதும் துடிப்பாகவே (Dynamic) இருப்பது எப்படி என்று பிரதமர் மோடியிடம் ஹர்மன்ப்ரீத் கேட்டார். அதற்குப் பிரதமர், இது என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும், பழக்கமாகவும் மாறிவிட்டது என்று பதிலளித்தார்.
2021ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஹர்லீன் தியோல் எடுத்த பிரபலமான கேட்சை அப்போது சமூக ஊடகங்களில் தான் பதிவிட்டதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். இறுதிப் போட்டிக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் பந்தை எப்படிப் பிடித்தார் என்பது குறித்துப் பேசிய பிரதமர், மேலும் அமன்ஜோத் கவுர் பிடித்த கேட்ச் குறித்தும் புகழ்ந்தார். கேட்ச் பிடிப்பதைப் பற்றி அவர் ஒரு தத்துவத்தையும் கூறினார். கேட்ச் பிடிக்கும்போது, நீங்கள் பந்தைப் பார்க்கலாம், ஆனால் கேட்ச் பிடித்த பிறகு, நீங்கள் கோப்பையைப் பார்க்கலாம். வீராங்கனை கிராந்தி கவுர், தனது சகோதரர் பிரதமரின் தீவிர ரசிகர் என்பதை நினைவு கூர்ந்தார். உடனே பிரதமர் மோடி, கிராந்தி கவுரின் சகோதரரைச் சந்திக்க அழைப்பு விடுத்தார்.
நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு, குறிப்பாக 'ஃபிட் இந்தியா' (Fit India) செய்தியை மேலும் பரப்புமாறு பிரதமர் கிராந்தி கவுரை வலியுறுத்தினார். நாட்டில் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினை குறித்து விவாதித்த அவர், உடற்தகுதியைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
வீராங்கனை தீப்தி சர்மா, 2017ஆம் ஆண்டு தங்கள் சந்திப்பை நினைவு கூர்ந்தார். அப்போது பிரதமர், தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும், அப்போதுதான் கனவுகளை அடைய முடியும் என்று கூறியதை நினைவுகூர்ந்தார். உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம், பிரதமர் மோடி அவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்துள்ளார்.
