கொங்கு மண்டலம் இனி எழுச்சிப் பயணமாக அமையும்: செங்கோட்டையன்; 16 ஏக்கரில் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு!
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அவர்கள், தவெக தலைவர் விஜய்யின் ஈரோடு சுற்றுப்பயணம் குறித்து இன்று பேட்டியளித்தார். விஜய்யின் வருகை, தமிழ்நாட்டில் ஒரு எழுச்சிப் பயணமாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
முதலில் அனுமதி கோரப்பட்ட வாரி மஹால் அருகாமையில் உள்ள இடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகப் பத்திரிகை செய்திகள் வந்தாலும், அது குறித்து இதுவரை எழுத்துப்பூர்வமான கடிதம் எதுவும் வரவில்லை.
காவல்துறையினரிடம் விசாரித்தபோது, "அனுமதி மறுப்பு குறித்து எங்கள் தரப்பிலிருந்து பத்திரிகைச் செய்திகள் கொடுக்கப்படவில்லை. மறுக்கப்பட்டால், உங்களுக்குத்தான் முதலில் தெரிவிப்போம்," என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்கள். இருந்தபோதிலும், தவெக-வினர் எச்சரிக்கையாகவே மாற்று இடம் ஒன்றைத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கான பணிகளை மேற்கொண்டு, இப்போது அனுமதி கேட்டு விண்ணப்பங்களை வழங்க இருக்கிறோம்.
புதிய இடமாகப் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு 16 ஏக்கர் பரப்பளவில் பிரச்சாரப் பொதுக்கூட்டமும், இதில் 10 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் வசதிக்காகவும் இடத்தை ஏற்பாடு செய்து கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும், பவளத்தாம்பாளையம் மற்றும் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் என இரு இடங்களில் எந்த இடம் என்று இதுவரை முடிவு செய்யவில்லை.
பொதுக்கூட்டத்திற்கு கட்சி சார்பில் 10,000 பேரும் மற்றும் பொதுமக்களும் வருகை தர இருப்பதால், அன்றைக்குத்தான் கூட்டத்தின் நிலவரம் குறித்துத் தெளிவாகத் தெரியும். வரும் டிசம்பர் 16ஆம் தேதி விஜய், கட்சி கோரியுள்ள மதியம் 12 மணி முதல் மாலை 6 மணிக்குள் ஈரோட்டுக்கு வர இருக்கிறார்.
விஜய் புறப்படும் நேரம், இங்கு வந்து சேரும் நேரம் ஆகியவை ஒரு நாளுக்கு முன்னால் தெளிவாகத் தெரிவிக்கப்படும். கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை எனக் கூறப்படுவது குறித்துக் கேட்டதற்கு, "நீங்கள் தான் சொல்கிறீர்கள். அதனை நாளை பார்க்கப் போகிறீர்கள்," என்று பதிலளித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயணத்தை வெற்றிகரமாக முடித்தது போல முடிப்பீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ஜெயலலிதாவின் பயணத்தின் போது ரோடு ஷோ நடைபெற்றது. இப்போது ரோடு ஷோ தவிர்க்கப்பட்டுள்ளது; இப்போது ஒவ்வொரு மாவட்ட வாரியாக பொதுக்கூட்டம் நடத்த வேண்டிய சூழல் இருக்கிறது என்று தெரிவித்தார்.
.jpg)