கரூர் சம்பவத்தை அடுத்துக் கட்டுப்பாடு: முதியவர்கள், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை - புதுச்சேரி காவல்துறை உத்தரவு!
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகிற டிசம்பர் 9, 2025 அன்று புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்குப் புதுச்சேரி காவல்துறை கடும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றவிருப்பது கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தவெக சார்பில் 'ரோடு ஷோ' நடத்த அனுமதி கேட்ட நிலையில், புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுத்தது. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், புதுச்சேரி முதல்வரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கோரிய பின்னரும், ரோடு ஷோவுக்குப் பதிலாகப் பொதுக்கூட்டத்திற்குச் சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. புதுச்சேரியைச் சேர்ந்த 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி பெறுபவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் கியூஆர் (QR) கோடுகளுடன் கூடிய பாஸ் வழங்க வேண்டும். பாஸ் வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. பொதுமக்களின் வசதிக்காகப் போதுமான குடிநீர், கழிவறை உள்ள அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேடை அமைத்து நாற்காலிகள் போடக் கூடாது. பொதுக்கூட்டத்துக்கு வரும் தொண்டர்களைப் பிரிவுகளாகப் பிரித்து உரிய தடுப்புகள் அமைக்க வேண்டும்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு அரசியல் கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
