நாமக்கல் வருகூராம் பட்டியில் போராட்டம்; நிலத்தை காலி செய்ய மறுத்த பொதுமக்கள்!
நாமக்கல் மாவட்டம், வருகூராம் பட்டி பகுதியில் திருநங்கைகளுக்கு அரசு வழங்கிய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வருகூராம் பட்டியில் 33 திருநங்கைகளுக்கு அரசு சார்பில் மனைப் பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தினை அளவீடு செய்வதற்காக வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு வந்தனர்.
அப்போது, அந்த இடத்தை விவசாயிகள் தானியங்களைக் காயவைக்கவும், மேய்ச்சல் நிலமாகவும் பயன்படுத்தி வருவதாகக் கூறி, நிலத்தை வழங்க முடியாது என கிராம மக்கள் தெரிவித்தனர். அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களைப் போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றதால், இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.