முப்பெரும் விழா கடிதம் மூலம் கதறலை வெளிப்படுத்துகின்றனர்! - முதல்வர் விமர்சனத்துக்கு தவெக தலைவர் விஜய் பதில்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
சமீபத்தில், திமுகவின் முப்பெரும் விழா குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், புதிய எதிரிகள் உருவாகியிருப்பதாகவும், மக்களைச் சந்திக்கவே மாட்டார் எனப் பேசியவர்கள் தற்போது வேறு விதமாகக் கதறத் தொடங்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். இது நடிகர் விஜய்யை மறைமுகமாகக் குறிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சரின் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ''விஜய் வெளியே வர மாட்டான், மக்களைச் சந்திக்க மாட்டான் எனப் பேசியோர், இப்போது வேறு விதங்களில் புலம்பத் தொடங்கி உள்ளனர். தங்களது கதறலை 'முப்பெரும் விழா' என்கிற கடிதம் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர். புதிய எதிரிகள் என்று பெயர் சொல்லாமல் குறிப்பிட்டதையும் காண முடிந்தது. கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றிக்கொண்டே கொள்ளை அடிப்போர் யார் என மக்களுக்குத் தெரியாதா என்ன?'' என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியின் தலைவருக்கும், புதிய அரசியல் கட்சித் தலைவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த நேரடி வார்த்தைப்போர் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.