பாமகவின் பொதுக்குழு தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம்; தியாகராயநகர் அலுவலகம் தலைம அலுவலகமாக அங்கீகாரம்!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டதை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அத்துடன், தேர்தல் சமயத்தில் மாம்பழம் சின்னத்தை வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் அதிகாரமும் அவருக்கே உண்டு என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பாலு, பாமகவின் பொதுக்குழு தீர்மானத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் அடுத்த ஓராண்டுக்கு பாமக தலைவராக நீடிப்பார். தேர்தல் ஆணையம் இதற்கான கடிதத்தை அனுப்பியுள்ளது, என்று தெரிவித்தார்.
மேலும், சென்னை தியாகராயநகர் அலுவலகத்தையே கட்சியின் தலைமை அலுவலகமாகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தேர்தல் சமயத்தில் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்தை வழங்கப் பரிந்துரைக்கும் அதிகாரம் அன்புமணிக்கே உள்ளது. அன்புமணி ராமதாஸை பாமக தலைவராக ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே பாமக கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த முடியும் என்றும் வழக்கறிஞர் பாலு கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை தியாகராயநகரில் உள்ள பாமக தலைமை அலுவலகத்தின் முன்பு திரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.