மாடியில் பதுங்கியிருந்த நபர் கைது; ஒய் பிரிவு பாதுகாப்பு இருந்தும் ஊடுருவியது எப்படி எனக் கேள்வி - வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தது, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் குறித்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, நீலாங்கரை கேசுரின டிரைவ் பகுதியில் உள்ள விஜய்யின் வீட்டிற்குள் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த ஒரு நபர், வீட்டின் மாடியில் பதுங்கி இருந்துள்ளார். இந்த நபரை நடிகர் விஜய் பார்த்ததும், அவர் விஜய்யை கட்டிப்பிடித்துள்ளார். விசாரணையில், அவர் மதுராந்தகத்தைச் சேர்ந்த அருண் என்பது தெரியவந்தது. அந்த நபர் இரவு முழுவதும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளார். அவரது நடத்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிந்தாலும், இந்தச் சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தும், அந்த நபர் வீட்டிற்குள் எப்படி நுழைந்தார் என்ற கேள்வி தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த நிர்வாகிகளுக்கு எழுந்துள்ளது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப். தரப்பின் வேண்டுகோளின் பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் நேரில் வந்து விஜய் வீடு முழுவதும் சோதனை நடத்தினர்.
இதற்கிடையே, விஜய் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தவெக நிர்வாகிகள் சந்தேகம் எழுப்பியுள்ளதால், ஒய் பிரிவு பாதுகாப்பு தனிப்பட்ட முறையில் இருந்தாலும், வீட்டைச் சுற்றி கூடுதல் பாதுகாப்பு வழங்க சென்னை போலீசாரிடம் கோரிக்கை வைக்க தவெக தலைமை முடிவு செய்துள்ளது.
வீட்டில் பதுங்கி இருந்த நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பிறகு, அத்துமீறி நுழைந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்யின் மேலாளர் வெங்கடேசன் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்தானா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.