மும்பையிலிருந்து தாய்லாந்து சென்ற விமானத்தில் சோதனை; இதுவரை வெடிகுண்டு கண்டறியப்படவில்லை - பெரும் பரபரப்பு!
மும்பையிலிருந்து தாய்லாந்து நாட்டின் புக்கெட் நகருக்கு 182 பேருடன் சென்று கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்துக்கு நடுவானில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
மும்பையிலிருந்து தாய்லாந்து நாட்டின் புக்கெட் நகருக்குச் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் (6E 1089), 176 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 182 பேருடன் புறப்பட்டது. இந்த விமானம் சென்னை வான்வெளியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, மும்பை விமான நிலையத்துக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், விமானத்தின் கழிவறையில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடிக்க இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தத் தகவலால் பரபரப்படைந்த மும்பை விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக அந்த விமானம் சென்னை அருகே பறந்து கொண்டிருப்பதை அறிந்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேசினர். அதையடுத்து, அந்த விமானம் இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாகக் கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் அதிரடிப் படையினர், விமானத்தை முற்றிலுமாகச் சுற்றி வளைத்துத் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட சோதனையில் இதுவரை சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கிடைக்காததால், இது வழக்கமான புரளியாக இருக்கலாமெனக் கருதப்படுகிறது. எனினும், விமானம் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்ட பிறகே, மீண்டும் தாய்லாந்து நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.