மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் ஆத்திரம்; கொலை மிரட்டல் விடுத்த நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!
சென்னை, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.பிரபு, தமிழக வெற்றிக் கழகத்தின் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக, அதே பகுதிக்குச் செயலாளர் பொறுப்பை எதிர்பார்த்து வந்த மற்றொரு நிர்வாகி இளங்கோவன், இணைச் செயலாளராக மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், தனக்குக் கட்சியில் உரிய மரியாதை இல்லை என இளங்கோவன் அதிருப்தியில் இருந்துள்ளார்.
இந்த மனக்கசப்பினால், இளங்கோவன் தனது ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு, பிரபுவுக்குத் தொலைபேசி மூலம் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், நேற்று நள்ளிரவு நேரத்தில், மாதவரத்தைச் சேர்ந்த இளங்கோவன், ரவுடி ரஞ்சித், ஆனந்தபாபு மற்றும் சாலமன் (எ) விக்னேஷ்வரன் ஆகிய நான்கு பேரும் வழக்கறிஞர் பிரபுவின் வீட்டிற்குச் சென்று, வீட்டுக்கு வெளியே வைத்து அவரை நேரடியாக மிரட்டியுள்ளனர்.
இது அனைத்தும் அங்குப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், தொலைபேசியில் இளங்கோவன் விடுத்த கொலை மிரட்டல் ஆடியோ பதிவையும் பிரபு, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகாராக அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நான்கு பேரையும் கொலை மிரட்டல் பிரிவின் கீழ் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நான்கு பேரையும் சிறையில் அடைக்கக் கொடுங்கையூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தில் பொறுப்பு வழங்கியதில் தொடர்ந்து சர்ச்சைகள் நிலவிவரும் நிலையில், இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.