சினிமா பாணியில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு துப்பு துலக்கிய போலீஸ்; இளைஞர் கைது!
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்த நபர், ’கூல் லிப்’ எனப்படும் ஒருவகை போதை வஸ்துக்காக ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டது, போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 14-ஆம் தேதி இரவு, சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் மோதி விபத்து ஏற்பட்டதாகக் கூறி, ரமேஷ் என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த மாம்பலம் ரயில்வே போலீசார், ரமேஷின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தலையில் ஏற்பட்ட இரத்தக் காயம் காரணமாகவே அவர் இறந்ததாகத் தெரிய வந்ததால், வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
சம்பவம் நடந்த சைதாப்பேட்டை ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், ரமேஷின் தலை, கழுத்து மற்றும் வயிற்றில் எட்டி உதைத்து அவரைத் தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. உடனடியாக அந்த இளைஞரை அடையாளம் கண்ட போலீசார், கோவிலம்பாக்கம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த **ரியாஸ் (25)** என்பவரைக் கைது செய்தனர்.
விசாரணையில், ரயிலில் அமர்ந்திருந்த ரமேஷிடம் ரியாஸ் 'கூல் லிப்' கேட்டுள்ளார். ஆனால், ரமேஷ் தன்னிடம் இல்லை எனக் கூறவே, அவரது சட்டைப் பையில் இருந்து ரியாஸ் அதை எடுக்க முயன்றுள்ளார். அப்போது, ரமேஷ் அவரது விரலைக் கடித்ததால் கோபமடைந்த ரியாஸ், அவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ரியாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.