விவாகரத்து மேட்ரிமோனியல் மூலம் அறிமுகம்; ₹2.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்துவிட்டு, இறந்ததுபோல் நாடகமாடிய கும்பல்!
விவாகரத்து மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் அறிமுகமாகி, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரிடம் திருமண நாடகமாடி, ₹2.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மோசடி செய்த கும்பல் குறித்து, பாதிக்கப்பட்ட அதிகாரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மோசடி செய்த பெண், தான் இறந்துவிட்டதாக வீடியோ அனுப்பி நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய இளநிலை பொறியாளர் ஜூன் சிங், கடந்த 2022-ஆம் ஆண்டு விவாகரத்து மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷ்ரத்தா லெனின் என்பவரை கேரளாவில் சந்தித்துள்ளார். அவரைத் திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பிறகு தனது இன்சூரன்ஸ், வைப்பு நிதி உள்ளிட்ட சொத்துக்களை ஷ்ரத்தாவின் பெயருக்கு மாற்றியதாகவும் ஜூன் சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அடிக்கடி கேரளாவிற்குச் சென்றுவந்த ஷ்ரத்தா, ஏப்ரல் மாதம் ஒருநாள், தான் இறந்துவிட்டதாக ஒரு வழக்கறிஞர் மூலம் வீடியோ அனுப்பியுள்ளார். அதில், சவப்பெட்டியில் தனது உடல் வைக்கப்பட்டிருப்பது போன்ற காட்சிகளை அனுப்பி ஏமாற்றியுள்ளார். மேலும், ஷ்ரத்தாவின் தாய் என அறிமுகப்படுத்திக்கொண்ட மற்றொரு பெண், “என் மகள் தற்கொலை செய்துகொண்டாள். தற்கொலைக் கடிதத்தில் உன் பெயர் உள்ளது” என மிரட்டி ₹10 லட்சம் கேட்டுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜூன் சிங், கேரள நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
கேரள உயர்நீதிமன்ற விசாரணையில், ஷ்ரத்தாவும் அவரது கணவர் லெனினும் சேர்ந்து, ஜூன் சிங்கை ஏமாற்றி ₹2.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்தது அம்பலமானது. நீதிமன்றத்தில், ஜூன் சிங்குடன் தான் நட்பாக மட்டுமே பழகியதாக ஷ்ரத்தா மறுப்புத் தெரிவித்துள்ளார். எனினும், உறவைத் துண்டிக்க நினைத்தபோது மிரட்டியதால், இறந்தது போன்ற வீடியோவை அனுப்பி நாடகம் ஆடியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூன் சிங்கைச் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. அதன் பேரில், ஜூன் சிங் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த மோசடி தொடர்பாகப் புகார் அளித்துள்ளார்.