பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளுக்கு உரிமை கோரி வியாபாரிகள் முற்றுகை!
வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி கடைகளை ஒதுக்குவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வியாபாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பழைய மீன் மார்க்கெட் இடத்தில் உள்ள 150 மாநகராட்சி திறந்தவெளி மேடைக் கடைகளை வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் ஒதுக்குவது குறித்து, மாநகராட்சி உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், பழக்கடை வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் என இரண்டு தரப்பினர் கலந்துகொண்டனர். அப்போது, பழக்கடை வியாபாரிகள் தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்க வேண்டும் என கோரினர். ஆனால், நடைபாதை வியாபாரிகள் குலுக்கல் முறையிலேயே கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், மாநகராட்சி உதவி ஆணையர் சதீஷ்குமாரை இரு தரப்பு வியாபாரிகளும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆலோசனைக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.