காஸா போருக்கு எதிராக திரண்ட திரை நட்சத்திரங்கள்: "இந்தியாவில் இது தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும்!"
இஸ்ரேலை கண்டித்து நடந்த போராட்டத்தில் வெற்றிமாறன், பிரகாஷ்ராஜ், சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்பு; மோடியை விமர்சித்ததால் பரபரப்பு!
சென்னை: காஸாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், பெரியாரிய உணர்வாளர்கள் 64 கூட்டமைப்பினர் சார்பாக சென்னையில் இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், தீனா, இயக்குநர் வெற்றிமாறன், அமீர், வி.சி.க. தலைவர் திருமாவளவன், ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ், "விஞ்ஞானம் மக்களின் வளர்ச்சிக்காகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதை வைத்து இனப்படுகொலை நடக்கிறது. குரங்கில் இருந்து மனிதன் வந்தான்; ஆனால் இஸ்ரேல் இன்னும் மனிதனாக வளரவில்லை" என காட்டமாக விமர்சித்தார். "இங்கு கூட்டம் நடத்தினால் போர் நிற்குமா?" என்ற கேள்விக்கு, "சமூக வலைத்தளங்கள் இதைச் சொல்லும்போது நிற்கும்" எனப் பதிலளித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், "காஸா போருக்கு இஸ்ரேல் மட்டுமல்ல, அதற்குத் துணை நிற்கும் அமெரிக்காவும் காரணம். இஸ்ரேலை எதிர்த்துக் குரல் கொடுக்காத பிரதமர் மோடியும் காரணம்" எனக் குற்றம்சாட்டினார். "அநியாயத்திற்கு எதிராகப் போராடுவது அரசியல் என்றால், நாங்கள் அரசியல் செய்வோம்" என்றும் ஆவேசமாகப் பேசினார்.
இயக்குநர் வெற்றிமாறன், "பாலஸ்தீனத்தில் நடப்பது ஒரு திட்டமிட்ட படுகொலை. அதை கண்டிப்பது நம் கடமை. ஆதாரமாக இருக்கும் ஆலிவ் மரங்களை அழிக்கிறார்கள். இன்று காஸா பஞ்சப் பகுதியாக உள்ளது" என ஆதங்கப்பட்டார்.
இயக்குநர் அமீர் பேசுகையில், "எனக்குத் தெரிந்து இந்தியாவிலேயே இதுபோன்ற ஒரு கூட்டம் நடந்திருக்காது. இங்குதான் நடக்கிறது. அதுதான் தமிழ்நாடு. இந்த அடையாளத்தை அழிப்பதற்காகத்தான் வடநாட்டிலிருந்து இங்கு வரவேண்டும் என நினைக்கிறார்கள். மனிதநேயத்தையும், சமூக நீதியையும் தூக்கிப் பிடிப்பது தமிழ்நாட்டு மக்கள் மட்டும்தான்" எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நடிகர் தீனா பேசுகையில், "காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்து மனிதநேயம் காக்க நாம் கூடியுள்ளோம். எந்த நாட்டிலும் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் குரல் கொடுப்போம்" என்று தெரிவித்தார்.